ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்.. முதல் 3 கையொழுத்துக்கள்..

By Ezhilarasan BabuFirst Published May 7, 2021, 11:27 AM IST
Highlights

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டமாக அது நடைபெற உள்ளது. 

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டமாக அது நடைபெற உள்ளது.

சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது, திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக அளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எனக்கூறி பதவி  ஏற்றுக் கொண்டார். ஸ்டாலின்  எதிரில் அமர்ந்திருந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல இந்நிகழ்ச்சியில் மு.க அழகிரி மற்றும் அவரது மகன் துரை தயாநிதி அழகிரி ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் திமுக தலைவர்கள் அண்ணா, மு. கருணாநிதி  ஆகியோரின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று அங்கே பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.  இதையெல்லாம் முடித்துக்கொண்டு பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வர உள்ளார். தலைமைச்செயலகத்தில்  முதலமைச்சருக்கான அறை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திடுகிறார். 

கொரோனா நிவாரணம் 4000 ரூபாய் வழங்குவது, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் திட்டங்கள் அதில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  இந்த அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது ஆகும். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். ஆக்சிஜன் மற்றும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாடு போன்றவற்றை போக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் அதில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்  நடைபெற உள்ள வீடியோ கான்பரன்சில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
 

click me!