
விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நடந்த முழு அடைப்பு போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவலும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்தார்.
வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. திருவாருரில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நடந்த முழு அடைப்பு போராட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. 90 சதவீதத்திற்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்றும் தெரிவித்தார்.
இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக்கட்சிகள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறினார்.
சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர். மிகவும் அமைதியான முறையில் இந்த போராட்டம் நடந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவே இந்த போராட்டத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த போராட்டம் நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
போராட்டத்தை நடக்கவிடாமல் போலீஸ் செய்திருந்த ஏற்பாடுகளை தாங்கள் முன்பே அறிந்திருந்ததாகவும், ஆனால் அதனையும் மீறி இந்த போராட்டம் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது என்றும் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.