
தமிழகத்தை மீட்டு தளபதி ஸ்டாலின் நிச்சயம் தலைமை ஏற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அண்ணா நகர் வேட்பாளர் எம்.கே மோகனை ஆதரித்து நியூ ஆவடி சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஏற்கனவே அண்ணா நகர் தொகுதி மக்கள் உதயசூரியனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு எடுத்து விட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய பெண்களுக்கு இலவச அனுமதி சீட்டு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 மானியம் ஆகிய அனைத்தும் வந்து சேரும். அதேபோல பேரிடர் நிவாரண நிதியாக ஆட்சி அமைந்தவுடன் தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன்-3 ஆம் தேதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்காயிரம் வழங்கப்படும்.
மேலும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தை தமிழகத்திலிருந்து ஒருவர் ஆள வேண்டும் என்றால் அது தளபதியாக மட்டுமே இருக்க முடியும், டெல்லியில் அடகு வைத்த தமிழகத்தை மீட்டு தலைமை ஏற்று நடத்தும் தலைவராக தளபதி இருக்கிறார். இந்த தேர்தல் முடிவுகளை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இமாலய வெற்றியை உதயசூரியன் சின்னம் பெறப் போகிறது என்று அவர் கூறினார்.