பிரதமராகத் துடிக்கும் அரசியல் எதிரி... ராகுலை பிரதமராக்க ஸ்டாலினின் வழிக்கு வந்த முதல்வர்..!

By Thiraviaraj RMFirst Published May 18, 2019, 3:00 PM IST
Highlights

சந்திரசேகர ராவ் தலைமையை விட ராகுல் காந்தியை பிரதமராக்குவேதே மேல். ஆகையால் காங்கிரஸ் தலைமையில் இணைந்து மத்திய அரசில் அங்கம் வகிக்கலாம் என அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்தியாவை ஆளப்போவது யார் என்பது இன்னும் ஐந்தே நாட்களில் தெரிய வரும். ஆனாலும் அதற்கு முன்பே அரசியல் கட்சிகள் ஆட்சியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றன.

 

பாஜகவை வீழ்த்தி எப்படியாவது காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு முதல் ஆளாகக் கிளம்பினார். இதற்காக அவர் மாயாவதி, மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோரை தேர்தலுக்கு முன்பே சந்தித்து வந்தார். 

பாஜக ஆட்சியை வீழ்த்தி மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதே நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் தான் தங்களது கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என மு.க.ஸ்டாலின் கூறியதை சந்திரப்பாபு நாயுடு விரும்பவில்லை. அது ஸ்டாலினின் தனிப்பட்ட கருத்து எனக் கூறி அதிர வைத்தார் நாயுடு. 

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு பெடரல் அணி அமைக்க சந்திரபாபுவில் அரசியல் எதிரியான தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சித்து வருகிறார். 3வது கூட்டணி அமைக்க அவர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும் பல கட்சி தலைவர்களை அவர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். இதனால், மூன்றாவது அணி அமைந்து சந்திரசேகர ராவ்முன்னிலை பெற்று விடுவாரோ என கலக்கத்தில் இருந்த சந்திரபாபு நாயுடு சற்று இறங்கி வந்துள்ளார்.

நாளை இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், அவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் வரிசையாக சந்தித்து வருகிறார். நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை நாயுடு சந்தித்துப் பேச இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று டெல்லியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

 

மூன்றாவது அணி முயற்சிகள் தோற்றால் ராகுல் காந்தியை பிரதமராக்க முன் மொழிய சந்திரபாபு நாயுடு முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சந்திரசேகர ராவ் தலைமையை விட ராகுல் காந்தியை பிரதமராக்குவேதே மேல். ஆகையால் காங்கிரஸ் தலைமையில் இணைந்து மத்திய அரசில் அங்கம் வகிக்கலாம் என அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் கூறியதை சந்திரபாபு நாயுடு ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

click me!