கருணாநிதி கவலைக்கிடம்.. கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Aug 7, 2018, 6:27 PM IST
Highlights

பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கருணாநிதி கவலைக்கிடமாக உள்ள நிலையில், திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் உடலுறுப்புகளை சீராக இயங்க வைப்பது சவாலாக இருப்பதாகவும் நேற்று மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வெளியிட்டது. 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை தெரிவித்திருந்தது. 

சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ள தொண்டர்கள் கதறி அழுதனர். காவேரி மருத்துவமனை, கோபாலபுரம், அண்ணா அறிவாலயம், ராஜாஜி ஹால் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஏற்கனவே மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் மீறி அதுபோன்ற செயல்களில் கட்சி நிர்வாகிகள் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

click me!