தினேஷ் குண்டுராவ் வீசிய 2 குண்டு... அப்செட்டில் ஸ்டாலின்.. அதிர்ச்சியில் துர்கா ஸ்டாலின்!

By Selva KathirFirst Published Sep 29, 2020, 5:06 PM IST
Highlights

கூட்டணி தொடர்பாக தினேஷ் குண்டு ராவ் கூறிய கருத்தால் ஸ்டாலினும், ஸ்டாலினை சந்தித்துச் சென்ற தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் துர்கா ஸ்டாலினும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கூட்டணி தொடர்பாக தினேஷ் குண்டு ராவ் கூறிய கருத்தால் ஸ்டாலினும், ஸ்டாலினை சந்தித்துச் சென்ற தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் துர்கா ஸ்டாலினும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஷ்னிக்கை நீக்கிவிட்டு கர்நாடகாவை சேர்ந்த தினேஷ் குண்டுராவை அண்மையில் தமிழக பொறுப்பாளராக்கியது காங்கிரஸ் மேலிடம். தினேஷ் குண்டுராவ் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர். இவரது தந்தை குண்டுராவ் கர்நாடக முதலமைச்சராக இருந்தவர். தினேஷ் குண்டுராவும் கர்நாடக அமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் கொள்கைகள் மீது தீவிர பற்று கொண்டவர். கடந்த முறை கர்நாடகாவில் ஜேடிஎஸ் –காங்கிரஸ் கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தவர்.

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தினேஷ் குண்டுராவ் கடந்த வாரம் சென்னை வருகை தந்தார். சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சந்திப்பு, செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் ஸ்டாலினை சந்திப்பது என்பது தான் தினேஷ் குண்டுராவின் திட்டம். அதன்படி சென்னை வந்ததும் முதலில் அவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பெரும்பலான நிர்வாகிகள் திமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசும்போதே கூட்டணி அரசு என்கிற நிபந்தனையை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதே போல் கடந்த முறை பெற்றதை காட்டிலும் அதிக தொகுதிகளை திமுக கூட்டணியில் பெற வேண்டும் என்றும் தினேஷ் குண்டுராவிடம் நிர்வாகிகள் கோரிக்கைகளை வரிசையாக அடுக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை தினேஷ் குண்டுராவ் சந்தித்தார். அப்போது சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் வென்று கூட்டணி அரசு அமைக்கும் என்று கூறி அதிர வைத்தார். இதனை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகே தினேஷ் குண்டுராவ் கூறிய கருத்தின் சீரியஸ் தன்மை தெரிய ஆரம்பித்தது.

சத்தியமூர்த்தி பவனில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஸ்டாலினை சந்திக்க தினேஷ் குண்டுராவ் புறப்பட்ட போது தலைவர் தற்போது ஓய்வில் இருக்கிறார் சந்திக்க முடியாது என்று கூறியுள்ளனர் அறிவாலயத் தரப்பினர். இதனால் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த கே.எஸ்.அழகிரி அதிர்ந்து போய்விட்டார். மேலிட பொறுப்பாளர் முதல் முறையாக தமிழகம் வந்துள்ளார், ஏற்கனவே ஸ்டாலினை சந்திக்க நேரம் பெற்றாகிவிட்டது. ஆனால் திடீரென ஸ்டாலின், குண்டுராவை சந்திக்க மறுப்பது ஏன் என்று அழகிரி டென்சனின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது தான் செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தலில் வென்று திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கும் என்று குண்டுராவ் கூறியது ஸ்டாலினை டென்சன் ஆக்கியுள்ளது கே.எஸ்.அழகிரிக்கு தெரியவந்துள்ளது. இதனால் அழகிரியே நேரடியாக ஸ்டாலினிடம் பேசியதாக சொல்கிறார்கள். கூட்டணி அரசு அமைப்போம் என்று கூறிய குண்டுராவை நான் உடனடியாக சந்தித்தால் அதை ஏற்றுக்கொண்டது போல் ஆகிவிடும் என்று கூறிவிட்டு ஸ்டாலின் இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் அதிர்ந்து போன அழகிரி, விஷயத்தை குண்டுராவிடம் கூறியுள்ளார்.

அதன்பிறகு மூத்த நிர்வாகிகள் அமர்ந்து பேசி திமுக – காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும் என்றே தினேஷ் குண்டுராவ் கூறியதாகவும், அதனை திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தவறாக புரிந்து கொண்டதாக விளக்கம் அளித்து குண்டுராவ் தரப்பில் இருந்தே ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.ஆனால் கூட ஸ்டாலின் உடனடியாக குண்டுராவை சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் சென்னையில் மேலும் ஒரு நாள் தங்கி மறுநாள் தான் குண்டுராவ் ஸ்டாலினை சந்திக்க முடிந்தது. இப்படியாக குண்டுராவ் – ஸ்டாலின் இடையிலான முதல் சந்திப்பே இப்படி கோணலாகியுள்ளது இரு கட்சி நிர்வாகிகளையும் கவலை அடைய வைத்துள்ளது.

அதே நேரத்தில் ஸ்டாலினை சந்தித்துச் சென்ற தினேஷ் குண்டுராவுக்கு அடுத்த இரண்டு நாட்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அறிந்து ஸ்டாலின் மனைவி துர்கா அதிர்ந்து போயுள்ளார்.ஏனென்றால் கொரோனா பரவத் தொடங்கியது முதலே ஸ்டாலின் எந்தவிதத்திலும் தொற்று பாதிப்பிற்கு ஆளாகிவிடக்கூடாது என்று கூடுதல் கவனம் செலுத்தி வருபவர் துர்கா. பெரும்பாலும் ஸ்டாலினை சந்திப்பவர்கள் யார் அவர் யாரை சந்திக்க உள்ளார் என்கிற முழு விவரத்தையும் பெற்று கொரோனா முன்னெச்சரிக்கைகளை மிகத் தீவிரமாக துர்கா கடை பிடித்து வந்தார்.

ஆனால் எல்லாவற்றையும் மீறி ஸ்டாலினை சந்தித்துச் சென்ற குண்டுராவிற்கு கொரோனா என்கிற தகவல் துர்காவை கவலை அடைய வைத்துள்ளது. ஏனென்றால் குண்டுராவ் ஸ்டாலினுடனான சந்திப்பின் போது கைகளை குலுக்கியுள்ளார், பொன்னாடை போர்த்தியுள்ளார், நெருக்கமாக நின்று பேசியுள்ளார். எனவே தான் துர்கா இந்த விஷயத்தில் மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக சொல்கிறார்கள்.

click me!