அழகிரி மீண்டும் உள்ளே வந்தால் என்ன நடக்கும்? கொந்தளித்த பேராசிரியர்! கவலையில் ஸ்டாலின்...

By sathish kFirst Published Aug 11, 2018, 7:30 PM IST
Highlights

திமுகவை குறிவைத்து விதவிதமான செய்திகள் வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. மு.க.அழகிரிக்கு முக்கிய பதவி கொடுக்க முடிவாகி இருப்பதாக, பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். 

திமுகவை குறிவைத்து விதவிதமான செய்திகள் வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.  மு.க.அழகிரிக்கு முக்கிய பதவி கொடுக்க முடிவாகி இருப்பதாக, பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், உண்மை நிலவரமே வேறு என்று கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு நேரில் சென்று பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்தார். அப்போது, மு.க.அழகிரிக்கு பதவி வழங்கப்படுவதாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் குறித்து மிகுந்த கவலையுடன் பேசிய திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், “அழகிரியின் செயல்பாடுகளால் கடுமையான அதிருப்தி அடைந்த  , கட்சிக்குள் யாரும் குழப்பம் செய்துவிடக்கூடாது என்று திடமாக முடிவெடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கினார். 

ஆனால், இப்போது கருணாநிதி  மறைந்த பிறகு அழகிரிக்கு  மீண்டும் கட்சியில் பதவி வழங்குவதாக செய்திகள் வருகிறதே, இது எந்தவிதத்தில் சரியாக இருக்கும்? அழகிரி மீண்டும் உள்ளே வந்தால் என்ன நடக்கும்? அந்த செய்திகளை படிக்கும் கட்சியினரும், பொதுமக்களும்  கருணாநிதி எடுத்த முடிவுக்கு எதிராக, அழகிரிக்கு பதவி வழங்கப்படுவதாக எதிர்ப்பார்கள் என கொந்தளித்திருக்கிறார். கருணாநிதி அழகிரியை வெளியில் அனுப்பிய பிறகு உங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆதரவாளர்களுக்கு, அழகிரி மீண்டும் உள்ளே வந்தால் அவர்களின் நிலை என்னவாகும்? தென் மாவட்டங்களிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, கட்சியினர் பாதிக்கப்படுவார்கள். எனவே, அப்படிப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”,என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து இருக்கிறார்.

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உண்மையான மனநிலையை அவர் திட்டவட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு, பத்திரிகைகள் தேவையின்றி கட்சியில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு பொய்யான செய்திகளை வெளியிடுவதையும் அவர் கண்டித்தும்  இருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்துள்ளார்கள். 

ஜெயலலிதாவை மறைவை தொடர்ந்து இரண்டே மாதங்களில் அ.தி.மு.க உடைந்தது. ஓ.பி.எஸ் – சசிகலா அணி உருவானது. பின்னர் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் – சசிகலா அணி உருவாகி ஒரு கட்டத்தில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணி இணைந்தது. இருந்தாலும் இடைத் தேர்தலில் தோல்வி அடையும் அளவிற்கு அ.தி.மு.க பலவீனமாகிவிட்டது. அண்மையில் நடைபெற்ற கருத்துக் கணிப்புகளில் கூட அ.தி.மு.க செல்வாக்கு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. அ.தி.மு.கவை உடைத்து பலவீனப்படுத்தியது போல் தி.மு.கவை உடைத்து பலவீனப்படுத்த  பாஜகவும் முயற்சித்து வருகிறதாகவும், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சியினரும், அவர்களுக்கு ஆதரவான சிலரும் வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை   எப்படி தடுப்பது என்றும் முக்கிய நிர்வாகிகள் தீவிரமான  ஆலோசனையில் உள்ளனர்.

click me!