
ஜி.எஸ்.டி. வரியுடன் கேளிக்கை வரி வசூலிப்பதால் திரையரங்குகள் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கடந்த 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்த நிலையில், தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 4 நாட்களாக திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று சட்டப்பேரவை நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரியால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
கேளிக்கை வரியை திரும்பப் பெறுவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரள அரசைப் போலவே தமிழக அரசும் திரையுலகத்துக்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்.
திமுக ஆட்சியின்போது, தமிழ் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது.
திரைத்துறையை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளதால் கேளிக்கை வரி குறித்து முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்
மாநில அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.