
கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகளிலும், அரசு கூட்டுறவு ஆலைகளிலும் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் வேளாண் சார்ந்த தொழில் பயிர்களில் கரும்பு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆனால் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களுக்குரிய நிலுவைத் தொகை கிடைக்காமல் தவிக்கும் நிலை அதிமுக அரசில் உருவாகியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
தனியார் சர்க்கரை ஆலைகள் 1650 கோடி ரூபாய்க்கு மேல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் வைத்திருப்பதால், அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தனியார் சர்க்கரை ஆலைகளிடம் நிலுவைத் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பது போல் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகையை வழங்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
ஆகவே தனியார் சர்க்கரை ஆலைகளுடனான பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தவும், அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மீதியுள்ள நிலுவை தொகையை உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆகவே இனியும் கால தாமதம் செய்யாமல், இடைத் தேர்தல் போன்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்காமல் கரும்பு விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களுக்கு தனியார் சர்க்கரை ஆலைகளிலும், அரசு கூட்டுறவு ஆலைகளிலும் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.