அண்ணா நூற்றாண்டு நூலகம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை..!!!

First Published Nov 5, 2016, 4:16 AM IST
Highlights


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டிசம்பர் 14க்குள் பாராமரிக்கவில்லை என்றால், நீதிமன்றமே குழு அமைத்து பாராமரிக்கும் நிலை ஏற்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் மனோன்மணி தாக்கல் செய்த மனுவில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. மேலும் நூலகத்தை முழுமையாக பராமரிப்பு செய்யாமல் உள்ளது. எனவே நூலகத்தை முறையாக பராமரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீ‌திப‌தி அமர்வு இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சட்ட ஆணையரகம் மூலம் இரண்டு வழக்கறிஞர்களை நியமித்தது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் நூலகத்தில் பல குறைபாடுகள் சரிசெய்யபடாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அண்ணா நூற்றாண்டு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்டவையை அக்டோபர்  30தேதிக்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் வழக்கறிஞர் இன்னும் நூலகத்தில் அடிப்படை வசதிகள் சரிசெய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

அதனை தொடர்ந்து நீதிபதிகள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரிக்க கோரி ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டதின் படி டிசம்பர் 14க்குள் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் இதையே இறுதி வாய்ப்பாக எடுத்துகொள்ள வேண்டும் என்றும், இனியும் காலம் தாழ்த்த கூடாது எனவும் தெரிவித்தனர்.

மேலும் தமிழக அரசு குழு அமைத்து முறையாக பராமரிக்கவில்லை எனில் நீதிமன்றமே முன்வந்து குழு அமைத்து பராமரிக்கும் எனவும் தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்து வழக்கை ஒத்திவைத்தார்.

click me!