அடே அப்பா.. எம்ஜிஆரையே விஞ்சிட்டாரு ஸ்டாலின்.. அரசுப் பள்ளியின் அடுப்படிக்கே சென்று ஆய்வு. மாணவர்கள் ஆச்சர்யம்

By Ezhilarasan BabuFirst Published Oct 27, 2021, 4:39 PM IST
Highlights

பின்னர் பள்ளியின் அனைத்து வகுப்பறைகள், ஆய்வகம், உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கு தினசரி உணவு வழங்கும் பட்டியலில் உள்ளவாறு மதிய உணவு தரப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் திரு. பெ கிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது, அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. முதலமைச்சர் என்ற பந்தா ஏதுமில்லாமல் சாமானிய மக்களுடன் பொது இடங்களில் உரையாடும் முதல்வராக வலம் வருகிறார் ஸ்டாலின். 

அந்த வகையில் திடீரென காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்வது, அரசு பேருந்தில் ஏறி பொது மக்களிடம் குறை கேட்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில், திடீரென அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் முதலியார் குப்பத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம் கடபாக்கத்திலுள்ள திரு.பெ கிருஷ்ணா அரசு மேல்நிலை பள்ளிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போதே முதலமைச்சர் அவர்களிடம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ஜெர்னாஸ் ஜான் அவர்கள்  அப்பள்ளியில் 488 மாணவர்கள் படித்து வருவதாகவும், தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும், மாணவர்கள் வருகை சிறப்பாக உள்ளதாகவும் கூறினார். மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வகுப்பறைகளுக்கு சென்று ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் உரையாடினார். கல்வியில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் பள்ளியின் அனைத்து வகுப்பறைகள், ஆய்வகம், உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கு தினசரி உணவு வழங்கும் பட்டியலில் உள்ளவாறு மதிய உணவு தரப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடனிருந்தார் மற்றும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென அரசு பள்ளியில் ஆய்வு நடத்தியது மாணவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

click me!