சொல்வது ஒன்று... செய்வது ஒன்றாக இருக்கும் மோடி அரசை தூக்கியெறிய வேண்டும்... இரா.முத்தரசன் ஆவேசம்!

By manimegalai aFirst Published Oct 27, 2021, 4:11 PM IST
Highlights

விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பிற்கும் மத்திய மோடி அரசு எதிராக செயல்படுகிறது. விவசாயிகள் ஓராண்டாக போராடியும் அவர்கள் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பிற்கும் மத்திய மோடி அரசு எதிராக செயல்படுகிறது. விவசாயிகள் ஓராண்டாக போராடியும் அவர்கள் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது கிளைகள் மாநாடு நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று உரையாற்றினார்.

மாநாட்டில் பேசிய முத்தரசன், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதைச் செய்வோம் என வாக்குறுதி அளித்தனர். பாஜக  ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார்கள். அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளிடம் இருந்து பணத்தை எடுத்து ஒவ்வொரு மக்களுக்கும் ரூபாய் 15 லட்சம் கணக்கில் போடுவதாகவும், வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என வாக்குறுதி கொடுத்தவர்கள் தற்போது ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு எதிரான மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளனர். ஒரு வருடமாக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ஊர்வலமாக சென்ற விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் மகன் காரை ஏற்றியதில் விவசாயிகள், பத்திரிகையாளர் பலியாகி உள்ளனர். அவரை இதுவரை பிரதமர் மோடி கண்டிக்கவில்லை.

உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தியை பல முக்கிய நதிகளில் கரைத்து இறுதியில் தமிழகத்தில் வேதாரணியம் கடற்கரையில் கரைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்கள் ஆக மாற்றவும் கூலியை 600 ரூபாயாக உயர்த்திடவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்காக முந்தைய ஆண்டுகளில் 138,000 கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் ரூ.70,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விரோதமான இத்தகைய மோடி அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக பொதுவுடமைச் சமுதாயம் படைக்க வேண்டும். பொதுமக்களை ஒன்று திரட்டி இச்செயலை செய்து முடிப்போம் என்று முத்தரசன் பேசினார்.

click me!