
தமிழக அரசியலில் பல நல்ல திருப்பங்கள் நடந்து வருவதன் எதிரொலியாக தொண்டர்கள் ப்ளெக்ஸ் பேனர்களை குறைக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரவித்துள்ளார்.
தமிழக அரசியலில் 1960களில் இடது சாரிகளின் ஆதிக்கம் இருந்தது.
எளிமைக்கு பேர்போன இடது சாரிகள் மக்களோடு மக்களாக தங்கள் பிரச்சனைகளை வைத்து வளர்ந்து வந்தனர்.
அதே நேரத்தில் இடது சாரிகளின் ஆதிக்கம் பெற்ற டெல்டா மாவட்டங்களில் வேகமாக வளர்ந்து வந்த திராவிட முன்னேற்ற கழகம் பிற மாவட்டங்களிலும் காலூன்றியது.
கருப்பு சட்டை போட்ட கம்யுனிஸ்டுகள் நாங்கள் என்று பிரகடனபடுத்திய திமுகவினர் இடதுசாரிகளின் பொருளாதார கோரிக்கைகளை பின்னுக்கு தள்ளி உணர்ச்சி கோஷங்களான மொழி இன கோஷங்களை முன்வைத்து வளர்ந்து வந்தனர்.
நாளடைவில் சினிமா துறையினர் ஈடுபாடு காரணமாக கட்சியின் வடிவமும் மாறியது.
வட்ட செயலாளரே கஞ்சி காய்ச்சி போஸ்டரை தோளில் சுமந்து வீதி வீதியாக ஒட்டி கூட்டம் நடத்தியதும் வீதி தோறும் படிப்பகங்கள் உருவாக்கி அறிவுசார்ந்த விவாதங்களில் திளைத்தும் மாறியது.
67க்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அதன் பின்னர் அதன் வடிவத்தை இழந்தது.
வசதியானவர்கள், போலி பந்தாக்கள், சினிமா கவர்ச்சி என அதன் தன்மை மாறிப்போனது.
பணமுள்ளவர்கள், சினிமா பிரபலங்கள், நடைமுறை அரசியல் அறியாதவர்கள் கூட கட்சியில் இடம்பிடிக்கலாம் என்ற நிலை உருவானது.
72ல் அதிமுக தொடங்கிய பிறகு திராவிட கட்சிகளின் வடிவம் முற்றிலும் மாறிப்போனது.
அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு கட்சிகளுக்கு நடுவில் நடக்கும் போட்டி,பொறாமைகள்,யார் ஆட்சியை பிடிப்பது என்பதிலேயே எல்லாம் அடங்கி போனது.
வாரிசு அரசியலுக்கு பின்னால் கட்சிக்காரகள் ஓட ஆரம்பித்தால் திறமயனவர்களுக்கு பதவி என்ற நிலை மாறி அடிமை சேவகம் செய்பவர்களுக்கு பதவி, சமூக விரோதிகளுக்கு பதவி என்று அரசியல் மாறிப்போனது.
என்னதான் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என இருந்தாலும் அதற்கு பின்னே காலில் விழும் கலாச்சாரமும், அடிமை மனோபாவமும் எதையாவது செய்து அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்ற நிலையே உருவானது.
இதன் எதிரொலியாக தலைவர்களை போற்றுவதும் புகழ் பாடுவதும் காலில் விழுவதும் கட் அவுட் வைப்பதும்தான் அரசியல் என்று மாறிப்போனது.
பக்கத்துக்கு மாநிலங்களில் கூட முதலமைச்சர்கள் காட்சிக்கு எளியவர்களாக இருக்கும்போது தமிழ்நாட்டில் ஒரு வட்ட செயலாளர் கூட 10 கட் அவுட் வைத்து அடிபொடிகளுடன் பந்தாவாக வளம் வரும் காட்சி மாறவில்லை.
தற்போது அரசியலில் இருந்து மிகப்பெரிய இரண்டு தலைவர்கள் இல்லாத நிலையில் சில சில்லறை சீர்திருத்தங்கள் ஆங்காங்கே தென்படுகிறது.
இது நல்ல அரசியலை நோக்கி போகுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்சிக்கு எளியவராக இருப்பதும் முதல் நாள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டு மறுநாள் முதல்வரை கவுதம் போன்றவர்கள் சந்திக்கும் ஜனநாயக அரசியலும் நடக்கிறது.
மறுபுறம் காலில் விழுவதை கண்டு எரிச்சல் அடைந்த மு.க.ஸ்டாலின் அதற்கு தடை போட்டதும் நல்லதொரு மாற்றமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த அதிரடியாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் கட்சியினர் கட்சி விழாக்கள் பொது நிகழ்சிகளில் தேவையற்ற வகையில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
கட்சி நிகழ்ச்சிகள் நடப்பதை தொண்டர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒன்றிரண்டு பேனர்கள் வைத்தால் போதுமானது, பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறாக திமுகவினர் பேனர் வைக்ககூடாது என்று கூறியுள்ளார்.
இந்த மாற்றம் தொடருமா??? தொடர்ந்தால் நல்லதொரு அரசியல் சூழல் உருவாகும்.