
தமிழக பட்ஜெட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை , விவசாயிகள் தற்கொலை , கடன் தள்ளுபடி , வறட்சி நிவாரணம் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. மாற்றமும் ஏமாற்றமும் தமிழக மக்களுக்கு அளித்துள்ள பட்ஜெட் இது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்திலும், நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலை, இன்றைக்கு, விவசாயிகள் கடன் வாங்கும் நிலைமையில் இல்லை என்பதுடன், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மட்டுமே இப்போதைக்கு தவிக்கிறார்கள் என்பதையும் புலப்படுத்துகிறது.
“விவசாயிகள் தற்கொலை கவலையளிக்கிறது. இதைத்தடுக்க தேசியக்கொள்கை வகுக்கப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றமே கருத்து தெரிவித்த பிறகும் கூட, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு இந்த நிதி நிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
“வளர்ச்சியின் பயன் விவசாயிகளை சென்றடைய வேண்டும்” என்பது இந்த நிதி நிலை தயாரிப்பின் முக்கிய நோக்கம் என்று நிதிநிலை அறிக்கையின் முகப்புரையிலே சுட்டிக்காட்டியிருக்கும் மாண்புமிகு நிதியமைச்சர் அருண்ஜேட்லி அவர்கள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது வேதனையளிக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை துவங்கப்பட்டதும், “இதன் பாதிப்பு, சிரமங்கள் 52 நாட்கள் மட்டுமே இருக்கும்” என்று மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
ஆனால் இப்போது நிதிநிலை அறிக்கையில் “பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகள் அடுத்த வருடம் இருக்காது” என்று நிதியமைச்சர் கூறியிருப்பது, பிரதமரின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாட்டை நிதியமைச்சர் எடுத்திருப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய எவ்வித சீர்திருத்த நடவடிக்கைகளையும் இந்த நிதி நிலை அறிக்கை தாங்கி வரவில்லை .
இது நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முழுமையாக பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, அந்தப் பணியில் பெண்களை அதிகமாக ஈடுபடுத்தும் நோக்கம், வீடில்லாதவர்களுக்கு 2019-ம் வருடத்திற்குள் 1 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கும் அறிவிப்பு, 50 ஆயிரம் கிராமங்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச்சலுகை, அரசியல் கட்சிகளின் நிதியாதாரங்கள் குறித்த சீர்திருத்தம் போன்றவை வரவேற்கப்பட வேண்டியவை.
அதேநேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, நதி நீர் இணைப்புத் திட்டம், மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம், வர்தா மற்றும் வறட்சி நிவாரண நிதி ஒதுக்குதல் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை தமிழக மக்களுக்கு “மாற்றமும், ஏமாற்றமும்” உள்ள அறிக்கையாக அமைந்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.