“மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம்” - திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

Asianet News Tamil  
Published : Nov 20, 2016, 11:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
“மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம்” - திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

சுருக்கம்

இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு “500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று அறிவித்து, கடந்த 8-11-2016 அன்றிலிருந்து மக்களுக்கு தாங்க முடியாத இன்னல்களை உருவாக்கியிருக்கிறது.

மக்கள் அனைத்து வங்கிகள் முன்பும், வங்கி ஏ.டி.எம்.கள் முன்பும் கடந்த 12 நாட்களாக கால் கடுக்க நிற்கிறார்கள். ஊழலை நீக்க “கறுப்புப் பணம் ஒழிப்பு” என்ற மிக முக்கியமான, வரவேற்கக் கூடிய கொள்கை முடிவை வேறு எந்த ஒரு அரசும் இப்படி அவசர கோலத்தில் அமல்படுத்தியிருக்க முடியாது என்ற ரீதியில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை படு மோசமாக அமைந்து விட்டது.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள், கூட்டுறவு சங்கங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக இல்லத்தரசிகள் அனைவரும் ஒரு சில ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக மணிக்கணக்கில் வங்கிகள் முன்பு வரிசையில் பசியும், பட்டினியுமாக நின்றுக் கொண்டிருக்கின்ற காட்சி வேதனையளிப்பதாக இருக்கிறது.

அண்டை மாநில முதல்வர்கள் எல்லாம் மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் “எங்கள் மாநில மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்” என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணம் வருகிறார்கள்.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி மக்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும் கை கட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 24-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்.

தமிழக மக்கள் படும் இன்னல்களையும், இடர்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவிக்கும் விதத்தில் நடைபெறும் இந்த மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கழகத்தின் இளைஞர் அணியினர் பெருமளவில் ஆர்வத்துடன் பங்கேற்று தலைவர் கலைஞர் அறிவித்துள்ள இந்த மிக முக்கியமான போராட்டத்தை மாபெரும் வெற்றிப் போராட்டமாக்கிட வேண்டுமென்று அனைத்து இளைஞரணி தோழர்களையும் கேட்டுக் கொள்வதாக முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?