
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தனது தங்கை கனிமொழியை ஆதரித்து ஸ்டாலின் பேசினார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசப்பேச நெகிழ்ந்துபோன கனிமொழி கண்கலங்கி சிரமப்பட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்தினார். ஸ்டாலின் பேசும்போது, கனிமொழி குறித்தும், அவர்களது தந்தை குறித்தும் பேசப்பேச கனிமொழி மேடையில் உணர்ச்சி வசப்பட்டார். கண் கலங்கியதை பிறர் அறியாவண்ணம் சிரமப்பட்டு குறைத்துக்கொண்டார்.
ஸ்டாலின் பேசும்போது உதயசூரியனில் போட்டியிடும் நமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது கலைஞரின் பிள்ளைகளாக எண்ணி வாக்களியுங்கள் என்று கூறுவேன். ஆனால் தூத்துக்குடியில் கலைஞரின் பிள்ளை கனிமொழியே போட்டியிடுகிறார்.
கனிமொழியை அறிமுகப்படுத்தவேண்டும் என்றால் என்னை அறிமுகப்படுத்துவது போன்றது. கலைஞரை அறிமுகப்படுத்துவது போன்று பொருத்தமாக இருக்கும். தூத்துக்குடி வேட்பாளராகப் போட்டியிடும் அவர் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். அப்படிச் சொல்வதை விட உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் நிறுத்தப்பட்டுள்ளார் என்றால் கலைஞர் இங்கு போட்டியிடுகிறார் என்று அர்த்தம். நானே இங்கு போட்டியிடுவதாக அர்த்தம். கலைஞர் பன்முகத் திறமை கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், தலைவர், நிர்வாகத்திறமை மிக்கவர்.
அப்படிப்பட்ட திறமைகளைக் கொண்டவர் கனிமொழி.எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளராக இருந்தவர், மக்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர், நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர் என ஸ்டாலின் பேசினார்.
கனிமொழியைப் பற்றியும், கருணாநிதியோடு ஒப்பிட்டும் ஸ்டாலின் பேசியபோது கனிமொழி மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார்.