
வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அதே நாளில் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆளும் அதிமுகவுக்கு மக்களவைத் தொகுதிகளை விட ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பயன்படும் 18 தொகுதிகளின் இடைத் தேர்தல் தான் முக்கியம் என்ற நிலையே தற்போது உள்ளது.
இதையடுத்து இந்த 18 தொகுதிகளுக்கும் புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதாவது பிரச்சாரம் முடிய இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் , இந்த ஆறு நாட்களும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு சாதகமான ஒன்றியங்கள், சாதகம் குறைந்த ஒன்றியங்கள் எவை என்பதை கணக்கிலெடுக்க வேண்டும்.
அதன்படி சாதகம் குறைவான பகுதிகளில் ஒவ்வொரு கிளைச் செயலாளரையும் அழைத்துக் கொண்டு வீடுவீடாக போய் திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும். மிடில் கிளாஸ் மக்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் பற்றியும், தொடர்ந்து அவை வரும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திண்ணைப் பிரச்சாரத்தின் முடிவில் ஆளும் கட்சியினர் அதிரடியாக ஒரு காரியத்தில் இறங்கப் போகின்றனர்.
அதாவது வரும் 16 ஆம் தேதி அதிகாலை கரன்சி விநியோகத்துக்கு முகூர்த்தம் குறித்திருக்கிறதாம் அதிமுக. 16 ஆம் தேதி அதிகாலை 18 தொகுதிகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் பண விநியோகத்தை கச்சிதமாய் தொடங்கி சில மணி நேரங்களில் முடித்துவிடத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஒரு நாள் அதிகாலை மின்சாரத்தை துண்டித்துவிட்டு இரவோடு இரவாக அதிடியாக பண விநியோகம் செய்யப்பட்டதைப் போன்று இந்த முறையும் சிறப்பாக செய்து முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.