கோயமுத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரும், ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவரும் கோவை ஐ.ஜி. அலுவலகத்தில், வெங்கு மணிமாறன் மீது நில அபகரிப்பு பல லட்சம் அபேஸ் பண்ணியதாக ஒரு புகாரை கொடுத்துள்ளனர்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக இருப்பவர் வெங்கு மணிமாறன். என்ன நேரத்தில் பிரச்சாரத்தை துவக்கினாரோ தெரியவில்லை, துவக்கத்தில் இருந்தே மனுஷனுக்கு பஞ்சாயத்துதான். காங்கயம் தொகுதியின் எம்.எல்.ஏ.வான தனியரசு, இவருடன் பிரசாரத்துக்கு வருவதை பி.ஜே.பி.யினர் விரும்பாமல் ரவுசு விட்டனர். காரணம்? ‘நான் அ.தி.மு.க.வுக்குதான் ஆதரவே தவிர, பி.ஜே.பி.க்கு ஆதரவில்லை. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்! என்று நான் பிரசாரம் செய்ய மாட்டேன்.’ என்று தனியரசு அறிவித்ததுதான்.
இதுமட்டுமில்லாமல், காங்கயம் தொகுதி முழுக்கவே தன்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, இதற்கு எம்.எல்.ஏ. எந்த தீர்வையும் உருவாக்கவில்லை என்று சில பகுதிகளில் மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி, ‘தனியரசுவோடு வந்தால் உங்களுக்கு ஓட்டு இல்லை.’ என்று வெங்குவை வெலவெலெக்க வைத்தனர். இந்த பிரச்னைகளில் இருந்து வெளியேறி ஒருவழியாக பிரசாரத்தை தொடர்ந்த வெங்கு மணி மாறனை மீண்டும் தொடர்ந்தது ஒரு பஞ்சாயாத்து. அது சில வருடங்களுக்கு முன் வெங்கு, காங்கயம் நகராட்சியின் சேர்மனாக இருந்தபோது பைப் கனெக்ஷன் கொடுப்பதற்கு பணம் வசூல் செய்து பெரியளவில் முறைகேடு செய்ததாக ஒரு புகார் எழுந்தது.
இந்த பஞ்சாயத்தையும் ஒருவழியாய் சமாளித்து, மேலே வந்த வெங்குவை வெச்சு செய்யுமளவுக்கு வெடித்துள்ளது இன்று ஒரு புதிய பிரச்னை. அது கோயமுத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரும், ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவரும் கோவை ஐ.ஜி. அலுவலகத்தில், வெங்கு மணிமாறன் மீது ஒரு புகாரை கொடுத்துள்ளனர்.
அதில் திருப்பூர் மாவட்டம் சிவன்மலை அருகே ஒரு நிலத்தை ரியல் எஸ்டேட் பிஸ்னஸுக்காக தனக்கு விற்பதாக கூறி பல லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு, ஆனால் நிலத்தை முறைப்படி கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், கடந்த 30-ம் தேதியன்று இதை பற்றி வெங்கு மணிமாறனிடம் காங்கயத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு அருகில் சென்றபோது, எதிரில் வந்த வெங்குமணிமாறன் இவர்களை கெட்ட வார்த்தைகளில் திட்டி, ‘நான் யாருன்னு தெரியாதா? என்னுடைய அரசியல் செல்வாக்கு உங்களுக்கு தெரியாதா? இன்னொரு முறை பணம் கேட்டு என்னைப் பார்க்க வந்தீங்கன்னா, உங்களைக் கொன்னுடுவேன்.’ அப்படின்னு அவர்களை மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளனர்.
எனவே இந்த புகாரில் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வெங்கு மணிமாறன் உள்ளிட்ட நான்கு பேர் மேல் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இந்த புகாரை அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் கடுமையாக மறுத்து. ‘எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால். திட்டமிட்டு இப்படி வதந்தி கிளப்பி, என்னை அசிங்கப்படுத்துகிறார்கள். குறுக்கு வழியில் என்னை தோற்கடிக்க முயல்கிறார்கள்.’ என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
ஆளுங்கட்சி வேட்பாளர் மீதான இந்த புகாரை, ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கணேசமூர்த்தி டீம் வகையாக பயன்படுத்தி, தேர்தலில் அடித்து தூக்க தெளிவாய் பிளான் பண்ணி களமிறங்கியுள்ளது.