
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை திமுக தான் கவிழ்க்க வேண்டும் என்ற அவசியமில்லை, அவர்களே கவிழ்த்துக் கொள்ளும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதாக தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் உள்ளது தன்னுடைய உருவம் தான் என்றும் ஆனால் குரல் தன்னுடையது அல்ல என்றும் எம்எல்ஏ சரவணன் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பாரிஸ்கார்னரில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்தநாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழவில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், .இந்த ஆட்சியை கலைக்க நாங்கள் முயற்சிக்கவில்ல என்றும், அவர்களை அவர்களே கவிழ்த்துக்கொள்ளும் அளவு நடந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டுமென திமுக கோரியது எதற்கு என்பது குதிரை பேரம் புகார் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்..
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய கொடுமை தமிழகத்தில் நடந்து முடிந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
ஆனால் தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் நமக்கு நாமே என்று சொல்லி கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் இல்லை என்றாலும் குடிநீர் தட்டுபாடு பிரச்சனையை மையமாக கொண்டு ஏரிகளை தூர்வாருவது போன்ற நடவடிக்கைகள் நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.