
நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவிக்க போயஸ் தோட்ட இல்லத்துக்கு வருமாறு தனது சகோதரர் தீபக் தன்னை தொலைபேசியில் அழைத்ததாகத் தெரிவித்தார். ஜெயலலிதாவின் இல்லம் தங்களுக்கே சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் உள்ளதாகத் தெரிவித்த தீபா, ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரப்போவதாகவும் குறிப்பிட்டார்.
தனது சகோதரர் தீபக் சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பதாகவும், தன்னை கொல்ல சதி நடந்து கொண்டிருப்பதாகவும் தீபா குற்றஞ்சாட்டினார். இதுமட்டுமல்லாமல் தீபக் சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்தார் என்றும் ஜெயலலிதாவை தீபக் கொன்றது குறித்து ஆதாரங்களுடன் நிரூபிப்பேன் என்றும் தீபா கூறியிருந்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், போயல் கார்டன் வேதா இல்லம் நான் வாழ்ந்த வீடு. ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எனக்கு விருப்பமில்லை. அதை ஒருபோதும் நான் அனுமதிக்கப்போவதில்லை. ஜெயலலிதா வாழ்ந்த வீடு கோவில் போல மதிக்கப்பட வேண்டும்.
சம்பவம் நடந்த அன்று எனது காரில் கஞ்சா வைப்பதாக கூறி மிரட்டினார்கள். இதனால் நான் உணர்ச்சி வசப்பட்டு கோபமாக பேசினேன். இதுகுறித்து பிரதமரை சந்தித்து முறையிட உள்ளேன். அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசல்களால் எனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்தும் விரைவில் பிரதமரிடம் தெரிவிக்க உள்ளேன்.
இந்த அரசு நீடிக்க வேண்டிய அவசியமில்லை. என் அத்தை ஜெயலலிதாவை கொலை செய்தது உண்மைதான்.
மேலும் தீபக்கும் சேர்ந்து கூட்டு சதி செய்து விட்டனர். இதன் பின்னணியில் சசிகலா குடும்பம் இருக்கிறது. அனைத்து ஆதாரங்களையும் நேரம் வரும் போது வெளியிடுவேன். தீபா இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார்.