ஸ்டாலினையும் விட்டுவைக்காத துரைக்கண்ணு; ஏதோ பேசணும்னு பேசுகிறார் என்று சாடல்...

First Published Jun 21, 2018, 1:18 PM IST
Highlights
Stalin speaking without sense duraikannu splash ...


தஞ்சாவூர்

மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசுவதெல்லாம் ஏதோ பேசணும் என்பதற்காக கூறிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு மேலாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் "காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி" விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கும்பகோணம் பெருநகர செயலாளர் ராம.ராமநாதன் தலைமை வகித்தார். 

ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் வரவேற்றார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கைத்தறி பிரிவு செயலாளர் லெனின், மாவட்ட ஜெ.பேரவை துணை தலைவர் செந்தில், பொருளாளர் சின்னையன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட பிரிவு செயலாளர் பாண்டியன், ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் மலர்கொடி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்றார். அப்போது அவர், "காவிரி தண்ணீரை பெற்றுத் தருவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் போன்ற அனைத்து விதமான போராட்டங்களையும் நடத்தினார். 

ஜெயலலிதாவின் போராட்டங்களின்போது தி.மு.க வாயே திறக்கவில்லை. தி.மு.க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் காவிரி வறண்டு போய் இருக்காது.

காவிரி நீர் சம்பந்தமான ஒப்பந்தத்தை தி.மு.க. புதுப்பித்திருந்தால் இன்று நாம் காவிரிக்கு கையேந்த வேண்டிய நிலை இருந்திருக்காது. 

வழக்கை திரும்ப பெறாமல் இருந்தால் கூட காவிரி காப்பாற்றப்பட்டி இருக்கும். காவிரி நீரைப் பெற நாம் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் காரணம் தி.மு.க தலைவர் கருணாநிதிதான்.

காவிரி பிரச்சனையில் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையைப்போல் இப்போது தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கடுமையான முயற்சி மேற்கொண்டனர்.  அதற்காகத்தான் இந்த வெற்றி விழா கூட்டங்களை நடத்தி வருகிறோம். 

மேட்டூர் அணையில் 39 அடி தான் தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை வைத்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மேட்டூர் அணையை உடனே திறக்கவேண்டும் என்கிறார். 

இந்த தண்ணீரை வைத்துக்கொண்டு சாகுபடி செய்ய முடியாது. கடைமடை வரை இந்த தண்ணீர் போகாது என்பது தெரிந்தும் ஸ்டாலின் மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என்கிறார். அவர் ஏதோ பேச வேண்டும், கூற வேண்டும் என கூறிக்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா எனக்கு பிறகு 100 ஆண்டு காலம் அ.தி.மு.க தமிழகத்தை ஆளும் என்று கூறினார். ஆனால் அதை நாங்கள் அன்று நம்பவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவர் மீதும் நம்பிக்கை வைத்துத்தான் அப்போது சூளுரைத்துள்ளார் என்று இப்போது நாங்கள் நம்புகிறோம்.

அதோடு மட்டுமல்ல, ஜெயலலிதா என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தினாரோ, அதற்கு மேலும் பல நல்ல திட்டங்களை இருவரும் செயல்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு முக்கியமான திட்டம்தான் குறுவை தொகுப்பு திட்டம்" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் தியாகு, அறந்தை சி.முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவமணி, ராம்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

click me!