கருணாநிதிக்கு ஜெயலலிதா போன்று தொலைநோக்கு பார்வை இல்லை - திமுகவை வம்பிழுக்கும் வைத்தியலிங்கம்...

First Published Jun 21, 2018, 12:56 PM IST
Highlights
Karunanidhi does not have a vision like Jayalalitha - Vaidyalingam mp


தஞ்சாவூர்
 
ஜெயலலிதாவை போன்று தொலைநோக்கு பார்வை இல்லாத கருணாநிதியால்தான் நமக்கு இவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. சாடினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் "காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி" விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கோவிந்தராசு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் குழ.சுந்தரராஜன் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்று பேசினார். அதில் அவர், "1924-ஆம் ஆண்டு தமிழகத்திற்கும், கர்நாடாகாவிற்கும் போடப்பட்ட ஒப்பந்தத்ததின்படி காவிரி நதி நீர் பங்கீடு 50 ஆண்டுகளாக சுமுகமாக நடந்து வந்தது. 

ஆனால், 1968-ஆம் ஆண்டு கர்நாடக அரசு ஏமாவதி, கபினி அணைகளை கட்டியது. அப்போது தமிழகத்தில் அண்ணா தலைமையிலான ஆட்சி நடைப்பெற்றது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 

அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி அண்ணா இறந்தபிறகு கருணாநிதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

காவிரி பிரச்சனை தொடர்பாக 26 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கருணாநிதி, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதால் வழக்கை திரும்ப பெற்றார். 

ஜெயலலிதாவை போன்று தொலைநோக்கு பார்வை இல்லாத கருணாநிதியால்தான் நமக்கு இவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. காவிரி நீருக்காக ஜெயலலிதா ஓவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 

1993-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்கவில்லை என்று 84 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், இந்த பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணப்படும் என்று உறுதியளித்த பிறகுதான் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு இதழிலில் வெளியிட செய்தவர் ஜெயலலிதாதான். அப்போது தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவுக்கு "பொன்னியின் செல்வி" என்று பாராட்டு விழா நடத்தினர். 

தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்தி டெல்டா  விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கவில்லை என்றால் கர்நாடக அரசும், மத்திய அரசும் மக்களால் தண்டிக்கப்படுவார்கள்" என்று இவ்வாறு அவர் பேசினார். 

இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருத்துவர் வைகைச்செல்வன், பேச்சாளர் டி.ஏ.பாலகிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ. திருஞானசம்பந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.  

click me!