
உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு தூணுக்கு மு.க.ஸ்டாலின் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் பேசிய அவர், "தொழிலாளர்களின் உரிமைகளுக்காக கருணாநிதி போராடினார் என்றும் திமுக ஆட்சிக் காலத்தில் தான் மே 1 ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் கூறினார். விவசாயிகள் பிரச்சனைக்காகவே முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர் விவசாய உழைப்பாளிகளை மத்திய மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மே தின உரைக்குப் பின்னர் கருணாநிதி குறித்துப் பேசிய ஸ்டாலின், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருதாகக் கூறினார். மருத்துவர்கள் அனுமதி அளிக்கும்பட்சத்தில் தலைவர் விரைவில் தொண்டர்களை சந்திப்பார் என்றார்.
இதோடு நிற்காத ஸ்டாலின் ராமமோகனராவ், விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதன் பின்புலம் என்ன? சோதனையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது? அது குறித்த தகவல்கள் இதுவரை ஏன் வெளியிடவில்லை ? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
இக்கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?