
அரசியலில் சில விஷயங்கள் பூமராங் ஆகும். எய்தவனையே தாக்கி எடக்குமடக்காக எரிச்சலூட்டும் சம்பவங்களும் உண்டு. அப்படியொரு டார்ச்சரில்தான் டார்கெட்டாகி தவிக்கிறது அ.தி.மு.க. அரசு.
‘மைனாரிட்டி தி.மு.க. அரசு’ இந்த வார்த்தையை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? கடந்த 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. அரசை இப்படித்தான் விளிப்பார் ஜெயலலிதா. மிக குறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன், குடைச்சலான காங்கிரஸின் துணையுடன் சற்றே சிக்கலோடுதான் ஆட்சியை நகர்த்தினார் கருணாநிதி.
இதை நையாண்டி செய்யும் விதமாகத்தான் ‘மைனாரிட்டி அரசு’ என்று வறுத்தெடுத்தார் ஜெயலலிதா. சட்டமன்றத்தில் ஜெ., எழுந்து பேசும் ஒவ்வொரு வரியின் துவக்கத்திலும், இறுதியிலும் இந்த ‘மைனாரிட்டி’ என்கிற வார்த்தையை அவர் பயன்படுத்தாமல் இருந்ததில்லை.
ஜெ., மட்டுமில்லை அவர் கட்சியின் ஒன்றிய கழக பேச்சாளர் வரை இதை சொல்லித்தான் தி.மு.க.வை திட்டி தூர்வாருவார்கள். போதாக்குறைக்கு ஜெயா, ஜெயா நியூஸ், ஜெயா நியூஸ், ஜெயா பிளஸ் என்று அந்த குழுமத்தின் அத்தனை சேனல்களிலும் ‘மைனாரிட்டி, மைனாரிட்டி, மைனாரிட்டி’ என்று சொல்லி தி.மு.க.வின் தன்மானத்தை மேய்ந்து தள்ளுவார்கள்.
கருணாநிதி இந்த விமர்சனத்தை மிக பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ‘ஆம் இந்த அரசு மைனாரிட்டி அரசுதான். இந்த நாட்டில் ஆதிக்க சக்திகளால் அடக்கப்பட்டு அல்லல்படும் மைனாரிட்டி மக்களை காத்து வாழ்வளிக்கும் அரசு. எனவே நாங்கள் நடத்துவது மைனாரிட்டி அரசு, மைனாரிட்டிகளுக்கான அரசு.’ என்று அந்த விமர்சனத்தை அப்படியே லாவகமாக மாற்றி சிக்ஸரடிப்பார்.
ஆனால் ஸ்டாலினுக்கோ அ.தி.மு.க.வின் இந்த விமர்சனம் மிக எரிச்சலை ஏற்படுத்தியது அப்போது.
மைனாரிட்டி அரசு எனும் வார்த்தை கத்தியை வீசி தங்களை காயப்படுத்திய அ.தி.மு.க.வுக்கு பதில் சூடு வைக்க காத்திருந்தவர் சமீபத்திய சூழலை மிக வகையாக பயன்படுத்த துவங்கியிருக்கிறார்.
ஜெ., மரணத்துக்குப் பின் பா.ஜ.க.வால் அ.தி.மு.க. அரசு நடத்தப்படுவதாக எழுந்திருக்கும் விமர்சனத்தை மனதில் வைத்து ‘பினாமி அரசு’ என்று இதை விமர்சிக்க துவங்கியிருக்கிறார். அதாவது மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழக அரசை அ.தி.மு.க.வை வைத்து பினாமியாக நடத்துகிறது என்று போட்டுத்தாக்குகிறார்.
ஸ்டாலின் மட்டுமில்லை, தி.மு.க.வின் கிளைக்கழக நிர்வாகி வரை அத்தனை பேரும் எடப்பாடி அரசை இப்படித்தான் விமர்சிக்கின்றனர். இது அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய எரிச்சலை கொடுத்திருக்கிறது. ஆனாலும் விடுவதாக இல்லை . கலா மாஸ்டர் பாணியில் சொல்வதானால் ச்சும்மா கிழி கிழியென கிழித்தெடுக்கின்றனர்.
இந்த கடுப்பைத்தான் கோவையில் காட்டியிருக்கிறார் எடப்பாடி. ‘சட்டசபையில் ஆட்சியை கலைக்க தி.மு.க. எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அந்த விரக்தியில்தான் இந்த அரசை ‘பினாமி அரசு’ என்று ஸ்டாலின் கூறுகிறார்.” என்று சொல்லி தனக்குத்தானே சமாதானம் சொல்லியிருக்கிறார்.
கூடவே ‘தமிழகத்தில் விவசாயிகள், மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுவதால் எதையும் கேள்வி கேட்டு பிரச்னை செய்யும் சூழ்நிலைகள் எதிர்கட்சிக்கு கிடைக்கவில்லை.’ என்று பேட்டி தட்டியபோது கோவை விமான நிலையமே விழாமல் சிரித்திருக்கிறது.
அவ்வ்வ்....