ஜெயலலிதாவின் கொசு போராட்ட சென்டிமெண்டை காப்பியடிக்கும் ஸ்டாலின்: கைகொடுக்குமா? கழுத்தறுக்குமா கொங்கு மாநாடு?!

First Published Mar 8, 2018, 8:09 AM IST
Highlights
stalin protest against ADMK


ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு 2006-ல் ஆட்சியை பிடித்த தி.மு.க. தாம் தூமென ஐந்து ஆண்டுகள் ஆண்டது. கொடநாட்டில் நீண்ட காலம் ஓய்வில் உறைந்துவிட்டார் ஜெயலலிதா. ‘இனி அ.தி.மு.க. அவ்வளவுதான்’ என்று விமர்சனங்கள் கொடிகட்டின. 

2011 சட்டசபை தேர்தலுக்கான அதிர்வுகள் லேசாக துவங்கின. கும்பகர்ண உறக்கத்திலிருந்த அ.தி.மு.க.வை பார்த்து நய்யாண்டியாக சிரித்தது தி.மு.க. இந்த நேரத்தில் சட்டென்று கோயமுத்தூரில் ஒரு கண்டன போராட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா. போராட்டம் என்றால் ஒரு காரணம் இருக்க வேண்டுமே? என்ன சொல்லலாம்! என்று யோசித்தபோது ’கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகளில் அலட்சியம் காட்டும் அரசை கண்டித்து ஆர்பாட்டம்!’ என்றார்கள். ‘மாஜி முதல்வர் ஜெயலலிதா கடைசியில் கொசுவுக்காக ஆர்பாட்டம் நடத்துமளவுக்கு தேய்ந்து போய்விட்டார்!’ என்று தி.மு.க. அமைச்சர்கள் சிலர் ஆணவமாய் சிரித்தனர்.

ஆனால் கோயமுத்தூரில் நடந்த அந்த கண்டன ஆர்பாட்டத்துக்கு கூடிய கூட்டம் வரலாறு படைத்தது. அதுவரையில்  தி.மு.க.வின் அடிவருடிகளாக இருந்த சில கட்சிகள், தில்லாக ஜெயலலிதாவின் பக்கம் போய் கூட்டணிக்கு நின்றன. அந்த கெத்துடன் தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. அடுத்தடுத்து இரண்டு முறையும் வென்று தி.மு.க.வின் சி.எம். கனவை பஸ்பமாக்கியது. 

ஆனால் ஜெயலலிதா இறந்து தமிழக அரசியல் சூழல் அந்தலிசிந்தலி ஆகிக் கிடக்கிறது. வலுவான எதிர்கட்சியான தி.மு.க., சாணக்கியத்தனம் செய்து ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை மறுத்திருக்கிறார் ஸ்டாலின். 

அதேவேளையில், மைனாரிட்டியாகி கிடக்கும் அ.தி.மு.க. அரசானது எப்போது வேண்டுமானாலும் கவிழும் எனும் நிலை உருவாகியுள்ளதாக ஸ்டாலின் நம்புகிறார். தேர்தலுக்கு தயாராக முனையும் அவர், தன் உட்கட்சியின் பலத்தை சோதிப்பதற்காக ‘கள ஆய்வு’ எனும் செல்ஃப் ஸ்கேனிங்கை செய்து வருகிறார். இதன் மூலம் கட்சியின் உட்புறம் உடைந்து, நொறுங்கிக் கிடப்பது புலனாகி இருக்கிறது. 

இதனால் கட்சியில் புதிய எழுச்சியை உருவாக்குவதற்காக ‘மண்டல மாநாடு’ எனும் பெயரில் ஈரோடில் இந்த மாத இறுதியில் இரண்டு நாட்கள் மாநாட்டை நடத்துகிறார். சுமார் கால் கோடி பட்ஜெட்டாம் இதற்கு. இந்த மாநாட்டில் பல கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து இயக்கத்தை உரமேற்றிட துடிக்கிறார் ஸ்டாலின். 

கோயமுத்தூர் ஆர்பாட்டத்தின் மூலம் எழுச்சி பெற்ற அ.தி.மு.க. அதே கொங்கு மண்டலத்தால்தான் மீண்டும் ஆட்சியை பிடித்தது. 

தனது கட்சி சோம்பிக் கிடக்கும் கோயமுத்தூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டத்தில் அதை கட்டி எழுப்பத்தான் இந்த மாநாட்டை ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கட்சி நிர்வாகிகள் சூட்டிப்பு காட்டவில்லையாம். நிதி வசூலில் துவங்கி எல்லாவற்றிலும் தங்களின் சுயத்தை பாதுகாக்கவே நிர்வாகிகள் முனைவதாக தளபதிக்கு தகவல் வந்திருக்கிறது. ஆனாலும் வேறு வழியின்றி அவர்களை உசுப்பி, உரமேற்றி மாநாட்டை வெற்றிகரமாக்கிட முனைந்து கொண்டிருக்கிறார். 

ஜெயலலிதாவை அரியணையிலேற்றியது கோயமுத்தூரின் கொசு போராட்டம்! ஸ்டாலினை முதல்வராக்குமா கொங்கில் நடக்கும் கொள்கை மாநாடு!? அல்லது வழக்கம்போல் உட்கட்சி பஞ்சாயத்து உள்ளிட்ட காரணங்களால் அக்கட்சியின் வெற்றியை கழுத்தறுக்குமா என்று தெரியவில்லை. பார்ப்போம். 

click me!