வன்முறையை தூண்டும் எச்.ராஜாவின் பேச்சுகளால் பா.ஜ.கவுக்கு தான் பாதிப்பு - திருமாவளவன் எச்சரிக்கை...

Asianet News Tamil  
Published : Mar 08, 2018, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
வன்முறையை தூண்டும் எச்.ராஜாவின் பேச்சுகளால் பா.ஜ.கவுக்கு தான் பாதிப்பு - திருமாவளவன் எச்சரிக்கை...

சுருக்கம்

violence speech of h.raja will affect BJP only - Thirumavalavan

தூத்துக்குடி

திட்டமிட்டு வன்முறையை தூண்டும் வகையிலும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து எச்.ராஜா பேசி வருவது பா.ஜ.கவுக்கும், அதன் வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்று திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார். 

அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "தமிழக அரசியலில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதை அறிவோம். 

திட்டமிட்ட உள்நோக்கத்தோடு தமிழக அரசியலில் ஒரு சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர் செயல்பட்டு வருகிறார். அவர் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அவரை கைது செய்திருக்க வேண்டும். 

ஆனாலும், அவர் தற்போது வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றளவில் சற்று ஆறுதலாக உள்ளது. மதவெறிக்கும், சாதி வெறிக்கும் தமிழகத்தில் இடம் இல்லை என்பதை எச்.ராஜா புரிந்து கொள்ள வேண்டும். 

அவருடைய கருத்துகளை அரசியல் ரீதியாக பேசட்டும். கொள்கை ரீதியாக பேசட்டும். நாகரீகமாக விமர்சனங்கள் செய்யட்டும். ஆனால், திட்டமிட்டு வன்முறையை தூண்டும் வகையில், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை பா.ஜ.க தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அது அந்த கட்சிக்கும், கட்சி வளர்ச்சிக்கும் நல்லதல்ல.

எச்.ராஜா கருத்துக்கு அரசியல் ரீதியாக கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளோம். அதுதான் சரியான அணுகுமுறை. அவரை கைது செய்ய வலியுறுத்தி அறவழியில் போராட்டங்கள் நடத்தலாம். மற்றபடி சமூகத்தை சீண்டும் வகையில் செயல்படுவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு உடன்பாடு இல்லை.

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை கண்டித்து நாளை சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கிறது. 

திருப்பத்தூரில் பெரியார் சிலையை உடைத்திருக்கிறார்கள். இதற்கு எச்.ராஜாவின் கருத்துதான் காரணம். அவர் ஏதோ ஒரு செயல் திட்டத்தோடு இருக்கிறார். 

சட்டமன்றத்தில் ஜீரோவில் இருந்து 117–க்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அதற்கு தமிழ்நாட்டில் சாதி, மதத்தின் பேரில் வெறியாட்டம் நடக்க வேண்டும், இந்துக்கள் வேறு, இந்துக்கள் அல்லாதவர்கள் வேறு என்ற நிலையில் மக்களை அரசியல் ரீதியாக அணி பிரித்து ஆதாயம் தேட வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

குஜராத், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் இதுபோன்ற யுத்திகளை கையாண்டார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. தமிழகத்தை வன்முறை காடாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமித்ஷா அறிவித்திருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. 

இதுபோன்ற சக்திகளை கட்சியில் வைத்திருப்பதால் நெருக்கடி ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

காவிரி நீர் மேலாண்மை வாரியம் குறிப்பிட்ட காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக வரையறை செய்துள்ளது. இந்த நிலையில் 4 மாநில செயலாளர்களை அழைத்து பேச வேண்டிய தேவை எந்த நிலையிலும் எழவில்லை. ஆனால், மத்திய அரசு அவர்களை டெல்லிக்கு அழைத்திருப்பது ஏன்? என்று தெரியவில்லை. 

இந்த கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உடன்பாடு இல்லை. ஏனென்றால், இந்த கூட்டத்தின் மூலம் அவர்கள் ஏதேனும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்து காலத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது.

டெல்லியில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி எம்.பி.க்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அமைக்கவில்லை என்றால் நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்வோம் என்று எம்.பி.க்கள் அறிவிக்க வேண்டும். 

பா.ஜனதா கட்சி கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப் போட முயற்சி செய்கிறது.

காவலாளர்கள் அவ்வப்போது தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற தற்கொலையின் பின்னணிகளை அரசு முழுமையாக ஆராய வேண்டும். காவலில் ஊழல், நிர்வாக முறைகேடுகள் மற்றும் பல நெருக்கடிகள் உள்ளன. ஆகவே இதுபோன்ற தற்கொலை சம்பவங்களை, தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்து கோப்புகளை மூடிவிடக்கூடாது" என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு முன்பே மாற்றப்படும் செல்வப்பெருந்தகை..? டெல்லிக்கு போன ரிப்போர்ட்..!
ஆசிரியர் உயிரை பறித்த திமுக அரசு.. கொஞ்சம் கூட கவலையின்றி Vibe செய்யும் ஸ்டாலின்.. இபிஎஸ் ஆவேசம்!