
அதிமுகவில் தற்போது உள்ள சூழ்நிலைகளைப் பார்க்கும் போது தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டாக உடைந்த பிறகு அக்கட்சியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. ஆளும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் டி.டி.வி.தினகரனை கட்சிப் பணிகளில் ஈடுபடக் கூடாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்த தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தினகரன் தலைமையில் தனி உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 13 எம்எல்ஏக்கள் தினகரன் தரப்பில் இருப்பதால் 122 எம்எல்ஏக்களில் 13 பேர் தனி அணியாக செயல் பட்டு வந்தால் அவர்களிடையே பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டபோதே சட்டசபையை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினோம்.
ஆனால் சட்டசபையை கூட்ட அரசு முன்வரவில்லை . எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டசபைகூட்ட கூறினோம். இது குறித்து கவர்னரை சந்தித்து வலியுறுத்தினோம். இப்போதாவது சட்டசபையை கூட்டுவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், அதிமுகவில் தற்போது உள்ள பிரச்னைகளை பார்க்கும்போது, மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டசபையில் மக்கள் பிரச்னைக்கு தொடர்ந்து திமுக குரல் கொடுக்கும் என்றும் தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி அகற்றப்பட வேண்டும், தேர்தல் நடக்க வேண்டும், நல்லாட்சி நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றும் ஸ்டாலின் கூறினார்.