
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை முறையாக நடத்தினால் திமுகதான் வெற்றி பெறும் என்றும் ஆனால் இந்த தேர்தலை நிறுத்த சதி நடப்பதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். விஷால் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆர்,கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது வேட்புமனு படிவத்தில் கையெழுத்திட்டவர்ளை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாக விஷால் புகார் அளித்தார்.
ஆனால் அதை ஏற்காத தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி, விஷாலின் வேட்பு மனுவை நிராகரித்தார். இதற்கு பல்வேறு தப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக செயல் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமாகிய மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷால் விவகாரத்தில் டெல்லி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆர்,கே.நகரில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முறையாக நடந்து கொண்டாரா ? அல்லது விஷால் விவகாரத்தில் அவரை யாராவது நிர்பந்தம் செய்தார்களா ? என்று விசாரிக்க வேண்டும் என கேட்டக்கொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதைப்போல, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை நிறுத்த சதி நடப்பதாக தெரிவித்த ஸ்டாலின், அங்கு முறையாக தேர்தல் நடத்தப்பட்டால் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என கூறினார்.