
உறுமீனுக்காக காத்திருந்த கொக்கு போல சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கட்டும், தமிழக அரசின் செயல்படாத தன்மை, மக்கள் பிரச்னைகள் ஆகியவற்றை எடுத்து வைத்து கதகளி ஆடிடலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தது தி.மு.க. ஆனால் சட்டசபை கூட்டத்தொடரை இறுதி செய்து வந்த அறிவிப்பால் கொதித்திருக்கிறார்கள்.
தமிழக சட்டசபையை கூட்டிட சொல்லி ஆளுநருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் ஸ்டாலின். ஒரு வேளை அது நிறைவேறாவிட்டால் மக்கள் மன்றங்களையே சட்டமன்றங்களாக மாற்றிவிடும் பிளானை கையில் எடுக்கிறது தி.மு.க.
அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன், நமக்கு நாமேவின் ஒரு பகுதியாக தமிழகத்தின் முக்கிய மண்டலங்களில் ஸ்டாலின் நடத்திய ‘சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எழுச்சி கிடைத்தது.
விதி எண் 110_ன் கீழ் எந்த குறுக்கீடும் இன்றி ஜெயலலிதா திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுக் கொண்டே போனதையும், அது நிறைவேறியதா அல்லது இல்லையா என்று கூட அவரது அரசு கவனிக்காததையும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசவோ, கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ வாய்ப்பே வழங்கப்படாத நிலையையும் விளக்குவதாக அந்த நிகழ்வுகள் அமைந்தது. தி.மு.க.வின் இளைஞரணியினர் தாண்டி கட்சி சாரா இளைஞர்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பை கிளறியது அந்த நிகழ்ச்சி.
இப்போது அப்படியொன்றைத்தான் கையில் எடுக்க திட்டமிட்டிருக்கிறது ஸ்டாலினின் கூடாரம். மாவட்டத்துக்கு மாவட்டம் அத்தனை சட்டசபை தொகுதி என 234 தொகுதிகளிலும் இப்படியொரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.
துவக்கத்தில் சில கூட்டங்களில் ஸ்டாலினே கலந்து கொண்டு கலக்குவது எனவும், பின் அத்தனை தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை இறக்கிவிட்டு சட்டமன்றம் முடக்கப்பட்ட செயலை நார் நாராய் கிழித்தெடுப்பது என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்காக பந்த் நடத்திய மேடையில் கைகோர்த்த விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரையும் இந்த மேடைகளில் ஏற்றும் முடிவை ஸ்டாலின் பரிசீலிக்கிறாராம்.
அவர்களுக்கு தூது அனுப்பும் திட்டமும் இருக்கிறது என்கிறார்கள். துரைமுருகன், ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை கொண்ட ஒரு குழுவை அமைத்து இதற்கான மொத்த பணிகளையும் திட்டமிட இருக்கிறார் ஸ்டாலின்.
கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3_ம் தேதி அவருக்கான பெரும் விழாவை ஒருங்கிணைத்து வருகிறது தி.மு.க. அந்த நிகழ்வு முடிந்த பின் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகும் என தெரிகிறது. தொகுதிக்கு தொகுதி தி.மு.க. ஏற்பாடு செய்யும் இந்த மேடைகளில் திருமா, முத்தரசன், ஜி.ஆர்., ஈ.வி.கே.எஸ். உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஸ்திரமற்ற தமிழக அரசு மற்றும் அதை ஆட்டி வைக்கும் பா.ஜ.க. என இரண்டு கட்சிகளையும் தாளித்தெடுப்பார்கள் என்பதே திட்டம்.
இந்த மேடைக்கு ’சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ போல் ‘முடங்கிய சட்டசபையும் மூழ்கும் தமிழகமும்’ என்கிற பெயரும் ஸ்டாலினின் இறுதிக்கட்ட பரிசீலனையில் இருக்கிறதாம்.
ஆக கியர் அப் ஆகிறாரா தளபதி!