
ஸ்டாலின் தீவிர ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கும் எடப்பாடியார் கடந்த சில நாட்களாகவே பலரையும் அழைத்து ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார். மூத்த சட்ட வல்லுநர்கள், சபா மற்றும் தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் ஆலோசனை செய்திருக்கிறார் எடப்பாடியார்.
சட்ட வல்லுநர்கள் தரப்பில் ரொம்பவே நம்பிக்கை தரும்படிதான் சொல்லியிருக்கிறார்கள். ‘தீர்ப்பு எப்படி இருந்தாலும் அப்பீலுக்கு இடமுள்ளது. எனவே ஆட்சிக்கு உடனடியாக எந்த ஆபத்தையும் வரவழைக்காது. மேலும், தீர்ப்பு வழங்கும் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை முன் வைக்கவும் சட்டத்தில் வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை நடந்தால் அது ஆட்சிக்கு மேலும் சாதகமாகவே அமையும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
எடப்பாடியார் அடுத்து சபாவோடு ஆலோசித்திருக்கிறார். ‘பல பேர் எடியூரப்பா வழக்கை இதோடு ஒப்பிடுறாங்க. அது தப்பு. தகுதி நீக்கம் செய்யும் முன்பே டெல்லியைச் சேர்ந்த அரசியல் சட்ட வல்லுநர்களின் கருத்தையும் கேட்டுதான் செஞ்சிருக்கோம். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு. அதனால் தீர்ப்பு நமக்கு சாதமாக வந்தாலும் வரலாம்’ என்றே சொல்லியிருக்கிறாராம் சபா.
ஆனாலும் தீர்ப்பு எப்படி வந்தாலும் தினா தரப்பில் இருக்கும் 18 பேரில் பத்து எம்.எல்.ஏ.க்களாவது தம்மிடம் வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் எடப்பாடியார். அதற்காக என்ன விலை கொடுக்கவும் ஆளுந்தரப்பு தயாராக இருக்கிறது. பதினெட்டு எம்.எல்.ஏ.க்களையும் எல்லா வகையிலும் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தீவிரமாகியிருக்கின்றன.
‘இன்னும் மூன்று வருஷம் ஆட்சியில் இருந்து அனுபவிக்கப் போகிறீர்களா? இல்லையென்றால் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடிக்கும் திமுகவின் திட்டத்துக்கு பலியாகப் போகிறீர்களா?’ என்று ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் கேட்டு வருகிறது எடப்பாடி தரப்பு. நடக்கப்போவது ஸ்டாலின் –தினா சந்திப்பா? இல்ல 18 எம்.எல்.ஏ.க்களில் முதல்வர் சந்திப்பா? கொஞ்சம் காத்திருப்போம்