கொஞ்சம்கூட தாமதிக்காத ஸ்டாலின்.. ஆக்சிஜன், மருந்துகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.. அதிகாரிகளுக்கு உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published May 8, 2021, 1:04 PM IST
Highlights

நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மருத்துவத் துறையும், காவல் துறையும், வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளும் முழுமையாக இணைந்து செயலாற்ற வேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்தினார்.

அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்துகள், ஆக்சிஜன் தங்குதடையின்றி கிடைத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்று கொண்டுள்ளார். அதனையடுத்து நேற்று மாலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து ஆலோசனை மேறகொண்டார். அப்போது,  அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: 

நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மருத்துவத் துறையும், காவல் துறையும், வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளும் முழுமையாக இணைந்து செயலாற்ற வேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்தினார். இறப்புகளை குறைத்திட அரும்பாடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்களின் தங்கள் சிறப்பான பணியை தொடர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்துகள், ஆக்ஸிஜன் போன்றவை தங்குதடையின்றி தொடர்ந்து கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தடுப்பூசி போடுவதில் மருத்துவத் துறையினர் மேலும் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் எனவும், இந்த இக்கட்டான சூழ்நிலையை அனைவரது கூட்டு முயற்சியினால் மட்டுமே வெல்ல இயலும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

click me!