
உதயநிதி என்பது தமிழ்ப்பெயரா? என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, டுவிட்டரில் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் பேசிய அவர், ஸ்டாலின் என்ற தனது பெயர் தமிழ் பெயர் அல்ல; காரணப் பெயர் என்று கூறினார். எனது தந்தை கருணாநிதி முதலில் எனக்கு ஐயாதுரை என்றே பெயர் வைக்க விரும்பினார்.
தந்தை பெரியாரை ஐயா என்று அழைப்பார்கள். அறிஞர் அண்ணாவுக்கு துரை என்ற பெயரும் உண்டு. இவர்கள் மீது பற்று கொண்டிருந்த எனது தந்தை, எனக்கு ஐயாதுரை என்று பெயர் வைக்க முடிவு செய்திருந்தார்.
அப்போது, ரஷ்யாவில் ஸ்டாலின் இறந்ததற்காக இரங்கல் கூட்டம் ஒன்றில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒருவர் வந்து ஒரு சீட்டைக் கொடுத்திருக்கிறார். அந்த சீட்டில், உங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்று
எழுதப்பட்டிருந்தது.
அப்போது கருணாநிதி, மேடையிலேயே தனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்றும், அவனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுவதாகவும் அறிவித்ததாக மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், திருமணவிழாவின்போது ஸ்டாலின் கூறியிருந்தார்.
இது குறித்து, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில், உதயநிதி தமிழ்ப் பெயரா? என்று பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த டுவிட்டரில், ஆமாம், உதயநிதி தமிழ்ப்பெயரா? சும்மா ஒரு டவுட் என்று பதிவிட்டுள்ளார். ஹெச்.ராஜாவின் இந்த பதிவு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.