ஸ்டாலினின் கடிதத்தால் நிர்வாகிகள் கலக்கம்.. தொண்டர்கள் உற்சாகம்

First Published May 3, 2018, 10:43 AM IST
Highlights
stalin letter to dmk followers


திமுகவில் அகற்றப்பட வேண்டிய சில களைகளை அகற்றி, அனைத்து வகையிலும் உரமூட்டும் பணிகள் உற்சாகத்துடன் மேற்கொள்ளப்படும். தமிழகம் எனும் மாபெரும் கழனியெங்கும் திமுக பயிர் செழிக்கவும், முற்றியதும் வெற்றிக்கதிர்களை விரைந்து அறுவடை செய்யவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திமுக தொண்டர்களுக்கு கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் அரசியல் பெருவடிவமான திமுக, தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாக விளங்குகிறது. திமுகவை மேலும் வலிமைப்படுத்தவும் செம்மைப்படுத்தவும் கூர்மைப்படுத்தவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்குள்ளும் அடங்கிய கட்சி நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் அழைத்து கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் எல்லா திசைகளிலும் எண்ணற்ற பிரச்சினைகள், ஆட்சியாளர்கள் மீது பொதுமக்கள் அதிருப்தி, நாள்தோறும் வெடிக்கின்ற போராட்டங்கள், மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சகம் என தொடர்ச்சியான நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில், திட்டமிட்ட தேதியில் கள ஆய்வை நிறைவு செய்ய முடியவில்லை.

இடையிடையே தேதி மாற்றப்பட்ட நிலையிலும் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதியுடன் அனைத்து மாவட்ட திமுக நிர்வாகிகளையும் சந்தித்து உரையாடும் அரிய வாய்ப்பை நிறைவு செய்துள்ளேன். மொத்தம் 27,678 கட்சி நிர்வாகிகளை நேரில் கண்டு, அவர்களின் நெஞ்சத்தில் இருந்து வெளிப்பட்ட ஆர்வம் மிக்க வார்த்தைகளைக் கேட்டறிந்தேன்.

திமுக வரலாற்றில், கட்சித் தலைமைக்கும் கடைக்கோடி கிளைகள் வரையிலுமான கட்சி அமைப்புகளுக்கும் இடையே இப்படியொரு சந்திப்பு, தலைநகர் சென்னையில் திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் முதல்முறையாக நடந்துள்ளது. கள ஆய்வில் பேச வாய்ப்புக் கிடைக்காதவர்கள் தங்களது ஆலோசனைகளை, குறைகளை, புகார்களை எழுதி அவற்றை தீர்வு காணும் பெட்டிகளில் போட்டனர். அந்தக் கடிதங்கள் அனைத்தும் என்னுடைய நேரடிப் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு, கவனமுடன் பரிசீலிக்கப்படுகின்றன.

கள ஆய்வுப் பணி என்பது, கட்சி எனும் பயிர் மேலும் செழித்தோங்குவதற்கான சந்திப்பாகும். திமுகவில் அகற்றப்பட வேண்டிய சில களைகளை அகற்றி, அனைத்து வகையிலும் உரமூட்டும் பணிகள் உற்சாகத்துடன் மேற்கொள்ளப்படும். தமிழகம் எனும் மாபெரும் கழனியெங்கும் திமுக பயிர் செழிக்கவும், முற்றியதும் வெற்றிக்கதிர்களை விரைந்து அறுவடை செய்யவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன். கள ஆய்வு கண்ட நாம், தேர்தலில் வெற்றி முகடு நோக்கி விரைந்து பயணிப்போம். நம் தமிழ் மக்களின் பேராதரவுடன் வெற்றிக் கொடியை பார்வியக்க உயர்த்திப் பட்டொளிவீசிப் பறந்திடச் செய்வோம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுகவில் உள்ள களைகள் அகற்றப்படும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது, நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக செயல் தலைவரின் கடிதத்தால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 

click me!