அண்ணன் அழகிரி வீட்டில் விருந்து சாப்பிடும் ஸ்டாலின்.. உருகும் உடன்பிறப்புகள்..

By Ezhilarasan BabuFirst Published May 21, 2021, 8:51 AM IST
Highlights

எத்தனை தேர்தல் வந்தாலும் ஸ்டாலினால் வெல்ல முடியாது, அவர் முதல்வரின் கனவு பலிக்காது எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அதையெல்லாம் கடந்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வென்று முதலமைச்சராக வெற்றி பெற்று பதவியேற்றுள்ளார். 

மதுரையில் கொரோனா பணிகளை ஆய்வு செய்யும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று பிற்பகல் தனது சகோதரர் அழகிரியின் இல்லத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே அரசியல் பகை நீடித்து வந்த நிலையில்,  என் தம்பி ஸ்டாலின் முதலமைச்சராகியிருப்பது தனக்கு பெருமையாக இருக்கிறது என மு.க அழகிரி மகிழ்ச்சி தெரிவித்திருந்த நிலையில், ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு இன்று செல்ல உள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மு.க ஸ்டாலின் தனது அண்ணன் வீட்டிற்கு செல்கிறார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நில குறைவுக்கு பின்னர், ஸ்டாலின் அழகிரி இடையே மோதல் ஏற்பட்டது. அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் அவரால் மீண்டும் கட்சியில் இணைய முடியவில்லை. அதற்கு ஸ்டாலின் தான் தடையாக இருக்கிறார் என   அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஸ்டாலின் மீது வெறுப்பு இருந்து வந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது அழகிரி மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என கூறப்பட்ட நிலையில், அதுவும் நிறைவேறவில்லை. அப்போது தனது ஆதரவாளர்களை  திரட்டி மதுரையில் கூட்டம் போட்ட அழகிரி ஸ்டாலினின் வளர்ச்சிக்கு தான் பெரிது உதவியதாகவும், ஆனால் ஸ்டாலின் தன் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தன் மீது இல்லாத பொல்லாத அதை கூறி கட்சியிலிருந்து நீக்க காரணமாக இருந்தார் எனவும் ஸ்டாலின் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

 

எத்தனை தேர்தல் வந்தாலும் ஸ்டாலினால் வெல்ல முடியாது, அவர் முதல்வரின் கனவு பலிக்காது எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அதையெல்லாம் கடந்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வென்று முதலமைச்சராக வெற்றி பெற்று பதவியேற்றுள்ளார். தேர்தல் ரிசல்டின் போது அண்ணன் என்ற முறையில் என் தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், அவரைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் என அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார். அன்றைய தினம் அண்ணன் தம்பி இருவரும் மனம்விட்டு தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது நிச்சயம் மதுரை வரும்போது வீட்டிற்கு வருவதாகவும் ஸ்டாலின் அழகிரியிடம் கூறியிருந்ததாக தெரிகிறது. அதேபோல் ஸ்டாலினின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழகிரி குடும்பத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் கலந்துகொண்டனர்.

 

அழகிரியின் மகன் தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோர் கடந்த 6ஆம் தேதி ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றனர். அப்போது அழகிரி உடல்நலம் குறித்து ஸ்டாலின் விசாரித்தார், அப்போது இருவருக்கும் இடையே யான பகை முடிந்துவிட்டது, பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது என அழகிரி மகள் கயல்விழி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், மதுரையில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரி வீட்டிற்கு அவர் செல்கிறார், அப்போது மத்திய உணவுக்கு அழகிரி வீட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  12 ஆண்டுகளுக்குப் பின்னர் அழகிரி ஸ்டாலின் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!