
மறைமுக தேர்தல் :
நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.
மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றினர்.
விதியை மீறிய திமுகவினர் :
கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதே போல பல சம்பவங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அப்செட்டான ஸ்டாலின் :
கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும்.
விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். தூத்தக்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'தமிழக உள்ளாட்சி தேர்தலில். இதுவரை கழகம் கண்டிராத சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம்.
அந்த வெற்றியை பெற்ற பிறகு என்னுடைய முதல் சுற்றுப்பயணம் இது. உள்ளாட்சியிலே இன்று மேயர்களாக, துணை மேயர்களாக மாநகராட்சி உறுப்பினர்களாக, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக, பேரூராட்சியில் உறுப்பினர்களாக அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொறுப்பேற்றுள்ளவர்கள் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி நாடாளுமன்ற் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும் சரி, மக்களோடு மக்களாக பணியாற்று என்ற அண்ணாவின் சொல்லை உணர்ந்து, நாம் நம்முடைய கடமையை ஆற்ற உறுதி எடுத்தக்கொள்ள வேண்டும்.
கடும் நடவடிக்கை :
1996-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று நான் மேயராக பதவியேற்றபோது, மக்கள் உனக்கு தந்தது பதவி அல்ல பொறுப்பு அதை உணர்ந்து பணியாற்று என்று கலைஞர் என்னிடம் சொன்னார். அதைத்தான் இன்றைக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறேன். உறுதியோடு சொல்கிறேன் எங்காவது சிறு தவறு நடந்தாலும் அதை நான் தொடர்ந்து கண்கானித்துக்கொண்டிருப்பேன். அதுமட்டுமல்லாமல் உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பேன் என்பதை உறுதியோடு சொல்லிக்கொள்கிறேன்' என்று திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இத்தோடு நிறுத்தாமல் திமுகவின் தலைமையிடமான அறிவாலயத்திற்கு தன்னை சந்திக்க வருவோரில், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு அனுமதி இல்லை என்று மைக் வழியாகவும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி சொல்லப்பட்டு வருகிறது. இதனால் திமுக உடன்பிறப்புகள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.