விசாரணைக் கைதி மர்ம மரணம்...! காவலர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றம்..! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்

By Ajmal KhanFirst Published May 4, 2022, 11:46 AM IST
Highlights

திருவண்ணாமலையில் விசாரணைக்கைதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விசாரணை கைதி மர்ம மரணம்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரை சாராய விற்பனை செய்வதாக கூறி 26-04-2022 அன்று காவல் துறையினர் விசாரணைக்கு திருவண்ணாமலை அழைத்துச் சென்றதாகவும், விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் திருவண்ணாமலை  கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அப்போது  தங்கமணிக்கு வலிப்பு நோய் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், உயிரிழந்த தங்கமணியின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். 

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் திருவண்ணாமலையில் விசாரணை கைதி மர்ம மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார் அதில், மதுவிலக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடந்த 24ம் தேதி திருவண்ணாமலையை சேர்ந்த தங்கமணி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து  விசாரணைக்கு பிறகு கிளை சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவருக்கு வலிப்பு ஏற்பட்ட காரணத்தால் கடந்த மாதம் ஏபரல் 27 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். மரணம்  தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உயர்நீதிமன்ற வழிகாட்டியபடி உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் இறந்தவர்களின் உறவினர்களிடம்  நடந்த சம்பவங்களைக் கூறி மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை எல்லாம் காண்பித்து, மரணம் தொடர்பாக விசாரணை நியாயமாக நடத்தப்படும் என்று உறுதி கூறிய பின்னர் தங்கமணியின் உடலை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

காவலர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றம்

இந்தநிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தங்கமணியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய காவல்துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், சிபிசிஐடி விசாரணை அறிக்கையின் படி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

click me!