
ஆர்கே நகர் இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் சூறாவளியாக சுற்றி, தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதையொட்டி அதிமுகவின் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், இன்று காலை முதல் மக்களை சந்தித்து, தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை செய்யவே, நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். ஆர்.கே. நகர் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவதே எனது இலக்கு.
கொடுங்கையூர் குப்பை கிடங்கை, அகற்றி அந்த பகுதியை சீரமைத்து, பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன். எனது சார்பில், அமைச்சர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்கள். இதில், மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.
மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஆர்கே நகர் இடை தேர்தலில், அவருக்கு பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முன்னுக்குப்பின் முரணாகவே பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.