
கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாளையொட்டி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கருணாநிதியின், 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை பணி வைர விழா ஆகியவை திமுக தொண்டர்களால் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இன்று மாலை, 5:00 மணிக்கு தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தலைமையில் விழா நடைபெறவுள்ளது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலர் துரைமுருகன் வரவேற்கிறார்.விழாவில், காங்., துணைத் தலைவர் ராகுல், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், ஜம்மு- - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்.கம்யூ., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இ.கம்யூ., தேசிய செயலர், டி.ராஜா ஆகியோர் பேசுகின்றனர்.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கோபாலபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து கருணாநிதியை சந்தித்து வாழ்த்தினர். தொடந்து அவரிடம் இருவரும் வாழ்த்து பெற்றனர்.
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை யாரும் சந்திக்க வேண்டாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து குவிந்துள்ளனர்.
தி.முக., தலைவர் கருணாநிதியின், 94வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரிடம் குடும்ப உறுப்பினர்கள் மட்டும், இன்று ஆசி பெறுகின்றனர். 'கருணாநிதி வைர விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் என்ற முறையில் பங்கேற்பேன்' என, அழகிரி கூறியிருந்தார். அவர் கட்சியில் இல்லை என்பதால், அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. அதனால், அவர் பங்கேற்க வரவில்லை.