
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றுக் கொண்டார்,.
இதனிடையே கட்சி மற்றும் ஆட்சியில் ஒரே தலைமைதான் இருக்க வேண்டும் என்றும் எனவே, தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ,சில அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கழக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் , சசிகலா சட்டமன்றகுழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து சசிகலா முதலமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு வசதியாக ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.இன்று அல்லது 9 ஆம் தேதி அவர் பதவியேற்றுக் கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் சசிகலா பதவியேற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை சசிகலா பதவியேற்க கூடாது என ஸ்டாலின் போர்கொடி உயர்த்தியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட, திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று டில்லி செல்ல உள்ளார்.
அங்கு சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முன்னர் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளார் . தீர்ப்புக்கு பிறகே, பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் ,அப்படி அவர் பதவியேற்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் ஸ்டாலின் புகார் தெரிவிக்க உள்ளளார் என கூறப்படுகிறது.
இன்று மாலை டெல்லி செல்லும் ஸ்டாலின் ஜனாதிபதியுடன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.