
கூவத்தூர் பேர வீடியோ விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூவத்தூர் பேர விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர இரண்டாவது நாளாக தி.மு.க எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆனால் சபையில் தொடர்ந்து பேச சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்த பின் பேரவையில் பேசிய சபாநாயகர் தனபால், எதிர்கட்சி எழுப்பிய பிரச்சனை தொடர்பாக தெளிவான தீர்ப்பை நேற்றே வழங்கிவிட்டதாகவும். இந்நிலையில் இன்று அவர்கள் வெளிநடப்பு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூவத்தூர் பணபேர விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.