
எங்களுக்கு எதிர்க்கட்சியானாலும், எதிரியானாலும் திமுக மட்டுமே என ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, செய்தியாளர்களிடம் கூறினார்.
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இதுவரை 90 லட்சம் பிரமாண பத்திரங்களை, டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். விரைவில் 40 லட்சம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வோம்.
அதிமுகவில் திடீரென நுழைந்த தீபா, பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அவர் எதற்காக செய்தார் என்பது இதுவரை தெரியவில்லை. அதிமுகவில் எந்த தொடர்பும் இல்லாத தீபா, என்ன காரணம் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
தீபா பேரவை என்பது தாய் கழகமான அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எம்ஜிஆர் இளைஞரணி, எம்ஜிஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, புரட்சித்தலைவி அம்மா மன்றம், அண்ணா தொழிற்சங்கம் ஆகியவை மட்டுமே அதிமுகவை சேர்ந்த அமைப்பு. தீபா பேரவைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அரசியல் அனுபவமே இல்லாத தீபா, அதிமுகவை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறுவது விளையாட்டு தனமான பேச்சு. அவருக்கு முதிர்ச்சி இல்லை. அதனால், அப்படி பேசி வருகிறார்.
அதிமுகவை பொறுத்தவரை பிரிவுதான் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், அதில் எந்த வேறுபாடும். இல்லை. நாங்கள் அனைவரும் ஒரே இயக்கத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு எதிர்க்கட்சியானாலும், எதிரியானாலும் திமுக மட்டுமே.
சட்டமன்றத்தில் திமுகவினர் வெளியேறியது தவறானது. சபா நாயகர் என்பவர் கூறுவதே இறுதி தீர்ப்பு. அதை எதிர்த்து வாதாட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.