
துரை முருகனை என்னவென்று நினைத்தீர்கள்?...
காட்பாடி டூ அறிவாலயத்துக்கு காவடி எடுத்தபடி ஒரு காலத்தில் கருணாநிதிக்கும், தற்காலத்தில் ஸ்டாலினுக்கும் கூடுதல் கரமாக ஒட்டியபடி தேர்தல் அரசியல் நடத்துபவரென்றா!
தலைமையிடத்தில் செல்வாக்காக இருப்பதை காட்டி தமிழகம் முழுக்க தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு சைலண்டாக தனி அரசியல் செய்பவரென்றா!
தேர்தல் காலங்களில் சில மாவட்டங்களில் அந்த மாவட்ட செயலாளரின் முடிவையும் தன் செல்வாக்கின் மூலம் தனக்கு விருப்பமான நபரை வேட்பாளராக்குபவர் என்றா!
தன்னால் வேட்பாளராக்கப்பட்டவர் மிக கேவலமாக தோற்றால் அந்த தோல்விக்கும் சம்பந்தபட்ட மா.செ.வையே பொறுப்பாக்கிவிட்டு ஸ்டாலின் நிழலில் நின்று ’தேர்தல் வெற்றிக்கு உழைக்காதவர்களை களையெடுக்கவும் தலைமை தயங்காது!’ என்று சவுண்டு விடுபவர் என்றா!
சட்டமன்றம் சென்று தொகுதிப் பிரச்னை பேசாவிட்டாலும், சட்டமன்றத்தின் வெளியே அல்லு தெறிக்க ‘மாதிரி சட்டசபை நடத்தி’ ஜனநயாகத்தை கேலிக்கூத்தாக்குபவர் என்றா!
வெளிநடப்பை பற்றி ஸ்டாலின் யோசித்த நொடியிலேயே ‘எப்பா எல்லாரும் ரெடியாகுங்க. தளபதி கெளம்புறார்.’ என்று சக எம்.எல்.ஏ.க்களுக்கு சமிஞை கொடுத்து சீன் போடுபவர் என்றா!
கோபாலபுரத்தில் அழகிரிக்கே அனுமதியில்லாத கருணாநிதி அறைக்குள் சென்று தலைவரை தொட்டுப்பார்த்து போட்டு எடுத்துவிட்டு, ‘என் தலைவன் மீண்டு வருவார்!’ என்று முகநூலில் பதிவிட்டு தொண்டர்களை உசுப்பி உற்சாகப்படுத்தும் நபரென்றா!
கருணாநிதியின் பிறந்தநாள் தொடர்பான பட்டிமன்றங்களில் நடுவராக அமர்ந்து எ.வ.வேலுவின் வழுக்கை தலையையும், பொன்முடியின் மடங்காத சுருள் முடியையும் மைக்கை பிடித்து மூச்சிரைக்க கிண்டல் செய்யும் நபரென்றா?....
இல்லையில்லை இது மட்டுமில்லை, துரைமுருகன் அதுக்கும் மேலே!
தமிழக அரசியலில் ஓயாது இயங்கி போரடித்ததால் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்போ என்னவோ லண்டனுக்கு செம்ம ஜாலி ட்ரிப் சென்று வந்திருக்கிறார்.
அங்கே முக்கிய இடங்களில் போட்டோக்களுக்கு துரை கொடுத்த போஸ் இப்போது சமூக வளைதளங்களை டரியலாக்கிக் கொண்டிருக்கிறது.
வெள்ளையும், சொள்ளையுமாக வேஷ்டியிலேயே து.மு.வை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு கோட் சூட்டில் அவர் நிற்கும் காட்சிகள் அதிரவைக்கின்றன. வரிவரியாய் உள்ளே டி ஷர்ட் அணிந்து அதற்கு மேலே ஒரு பிளேஷரை போட்டபடியும், ஃபுல் கோட் சூட்டிலுமாய் ‘நெருப்புடா’ என்பது போல் சீரியஸ் முகத்துடன் துரை கொடுக்கும் போஸ்கள் சத்தியமாய சிரிப்பை வரவழைக்காமல் ‘இவருக்குள்ளேயும் ஒரு ஹீரோ ஒளிஞ்சுட்டு இருந்திருக்கான் பாரேன்” என்று பதற வைக்கின்றன.
சர்வதேச பிரபலங்களை மெழுகில் அச்சு அசலாய் வார்த்து வைக்கும் மேடம் டுசாட்ஸ் மியூஸியம் சென்று ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ், வில்லியம் உள்ளிட்டோர் அடங்கிய குடும்ப பொம்மைகளுக்குள் துரையும் நின்று எடுத்திருக்கும் போட்டோ அவரது சர்வதேச அரசியல் தொடர்புகளை (அவ்வ்வ்வ்...) காட்டுகிறது.
இந்த மியூஸியத்தில் இந்திரா, காந்தி, தலாய்லாமா, ஆகியோருக்கும் சிலை இருக்கிறது. அவர்களின் அருகிலெல்லாம் பவ்யமாய் நின்று போட்டோ எடுத்திருக்கும் துரை முருகன், ஒரு சிலையிடம் மட்டும் அதன் தோளில் கை போட்டு போட்டோ எடுத்திருக்கிறார்.
அதுதான் மோடி! மோடி சிலையின் தோளில் கைவைத்து அழுத்தி ‘எங்க தளபதியை தாண்டி நீங்க தமிழ்நாட்டுல கால் வெச்சிடுவீங்களோ?!” என்று நெருப்பாக கேட்பது போல் ஒரு கெத்து போஸை தட்டியிருக்கிறார் பாருங்கள்...
அங்கே நிக்குறார்யா நம்ம துரை!