ஆட்சி பொறுப்பேற்கும் வரை காத்திருக்காத ஸ்டாலின்... வீட்டிலேயே அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு மீட்டிங்..!

By Asianet TamilFirst Published May 3, 2021, 9:31 PM IST
Highlights

பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. திமுக மட்டும் 126 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றதால், அறுதி பெருபான்மையுடன் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 7-ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருவதால், தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி தொற்று 20 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இந்நிலையில், ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை மு.க. ஸ்டாலின் தொடங்கிவிட்டார். கொரோனா தொற்று பற்றி ஆலோசிப்பதற்காக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை செயலாளர் அதுல்யமிஸ்ரா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மு.க. ஸ்டாலினுடன் அவருடைய இல்லத்தில்  ஆலோசனை மேற்கொண்டனர். 
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில் இத்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரதுறைச் செயலாளர், வருவாய்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று எனது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் போது, கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினேன்.
தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு சென்னையில் ரெம்டெசிவர் போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போன்று, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்ககளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

click me!