
திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதைதொடர்ந்து தலைமை செயலகம் மு.க.ஸ்டாலின் தலைமையில், துரைமுருகன், மா.சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம் உள்பட 8 எம்எல்ஏக்கள் சென்றனர்.
அங்கு சபாநாயகர் தனபாலை சந்தித்த மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையை உடனடியாக கூட்டக்கோரி மனு கொடுத்தார். அதற்கு, விரைவில் நடத்த நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
பின்னர் வெளியே வந்த மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை கலைய வேண்டும். இதற்கு உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும். அதில் பட்ஜெட் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளோம். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு கொடுக்க அரை மணிநேரத்துக்கு மேலாக காத்திருந்தோம். ஆனால், அவர் எங்களை சந்திக்கவில்லை. அவருக்கு எப்போது, சந்திக்க விரும்புகிறாரோ, அப்போது நாங்கள் பேசலாம் என முடிவு செய்துவிட்டோம்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடி கொண்டு இருக்கிறது. டெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணம், குட்டி கரணம், சாட்டையடி, நிர்வாண ஓட்டம் என தினம் தினம் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதை பற்றி பேசவும் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என கோரியுள்ளேம்.
அதிமுகவில் இரு அணிகளும் இணைந்ததை நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்களது கட்சி விவகாரம்.
இவ்வாறு அவர் கூறினார்.