
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக, மூன்றாவது அணி ஒன்று உருவாக்கி விட்டது.
சசிகலா அணியில் இருந்து உருவான அந்த மூன்றாவது அணிதான், பெரும்பாலான அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் கொண்டு இயங்கும் பெரிய அணியாக உள்ளது.
அமைச்சர்கள் அணிதான், ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. சசிகலா குடும்பத்தை நீக்கி விட்டு ஒன்று பட்ட அதிமுகவை உருவாக்கும் முயற்சியில் அது ஈடுபட்டுள்ளது.
ஆனால், தங்கள் குடும்பத்தின் அதிகார ஆதிக்கம் பறிபோய் விட கூடாது என்பதற்காக, அந்த அணியில் இருந்து சில எம்எல்ஏக்களை உடைத்து இருக்கிறார் தினகரன்.
தினகரனுக்கு ஆதரவாக, பெரம்பூர் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ க்கள் உள்ளனர். மேலும், இன்று மாலை எம்.எல்.ஏ க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் தினகரன். அந்த கூட்டத்தில் எத்தனை எம்.எல்.ஏ க்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது இனிதான் தெரிய வரும்.
அதே சமயம், அமைச்சர்கள் யாரும் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று அமைச்சர்கள் அணி போர்க்கொடி பிடிப்பதால், விஜயபாஸ்கர் மட்டுமே தினகரனுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம், கட்சி மற்றும் ஆட்சியில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதில், அமைச்சர்கள் அணி உறுதியாக இருக்கிறது.
சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக கருதப்பட்ட உதயகுமார், செல்லூர் ராஜு, ஓ.எஸ் மணியன் உள்ளிட்ட அனைவருமே, தினகரனுக்கு எதிராகவே உள்ளனர்.
அதேபோல், அமைச்சர்கள் அனைவரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ க்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
ஒருவேளை, தினகரன் ஒருசில எம்.எல்.ஏ க்களை இழுத்து நெருக்கடி கொடுத்தாலும், பன்னீர் ஆதரவில் உள்ள எம்.எல்.ஏ க்கள் அதை ஈடு செய்வார்கள் என்றே தெரிகிறது.
எனவே, எப்படி பார்த்தாலும், சசிகலா குடும்பத்தில் கடைசி அத்தியாயம், அவரது ஆதரவாளர்கள் துணையுடன் எழுதப்பட்டு வருகிறது என்பதே இப்போதைய நிலை.