இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றமா.?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் தேர்தல்களில் அரசியல் கட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். என் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக வியூகம் அமைத்து வருகிறது. இதனை முறியடிக்க நாட்டில் உள்ள எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டமானது நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான அழைப்பிதழில் பிரசிடெண்ட் ஆப் பாரத் என அச்சிடப்பட்டு உள்ளது. இதற்கு பாஜக ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்! என்ன முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.