சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதியின் கருத்திற்கு உத்தரபிரதேச சாமியார் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உதயநிதி மற்றும் அவரது வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
சனாதன பேச்சு- உதயநிதிக்கு மிரட்டல்
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த ந மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதயநிதி பேச்சுக்கு எதிராக காவல்நிலையத்தில் வழக்கும் த தொடர்ந்திருந்தனர். இதனிடையே, பரமஹம்ச ஆச்சார்யா எனும் அயோத்தி சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார்.
உதயநிதி தலைக்கு 10 கோடி பரிசு
மேலும், உதயநிதியின் படத்தை கத்தியால் வெட்டிய அவர், புகைப்படத்தை எரித்து சாம்பலாக்கி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், என் தலையை 10 சீவ ஏன் 10 கோடி 10 ரூபாய் சீப்பு இருந்தாலே போதும் என கூறி உதயநிதி பதிலடி கொடுத்தார். இதனிடையே பரமஹம்ச ஆச்சார்யா சாமியாரின் உருவப்படத்தை திமுகவினர் எரித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அமைச்சர் உதயநிதிக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் அவருக்கும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்சியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்காசி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் பாதுகாப்பு அதிகரிப்பு
அதே போல சென்னையில் உதயநிதி தங்கியிருக்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு, பசுமை வழிச்சாலையில் உள்ள வீடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீடுகளில் ஏற்கனவே இருந்த போலீசார் பாதுகாப்பை விட கூடுதலாக பாதுகாப்பை தமிழக போலீசார் அதிகரித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.