சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் விவாதப் பொருளாக மாறி உள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து தனது X சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறி உள்ளார். பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கொந்தளித்து வருகின்றன. பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பல தரப்பிலும் உதயநிதியின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்து அமைப்புகள் சார்பில் உதயநிதிக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்களை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அயோத்தி சாமியார் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே சென்று உதயநிதி தலைக்கு ரூ.10 பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளார். இப்படி உதயநிதி பேசியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியது இந்த பரபரப்பு காரணம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சனாதன் எதிர்ப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, டெங்கு, மலேரியா, கொரோனாவை எதிர்க்க முடியாது. ஒழிக்க வேண்டும் அதே போல தான் இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும். சனாதானத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்று பேசியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு தான் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். இதனால் X சமூகவலைதளத்தில் #UdhayanithiStalin, #IStandWithUdhayStalin போன்ற ஹேஷ்டாகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.
தமிழகத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது; உதயநிதி தமிழகத்தின் பப்புவாக இருக்கிறார் - அண்ணாமலை விமர்சனம்
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமான கருத்துருவங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்பது சனாதனக் கருத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு திருக்குறளைத்தான் உதயநிதி பேசியிருக்கிறார் திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன்? அரசியல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சனாதனம் என்பதும்
சனாதன எதிர்ப்பு என்பதும்
காலங்காலமான கருத்துருவங்கள்
பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு
என்பது சனாதனக் கருத்து
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு
திருக்குறளைத்தான்
உதயநிதி பேசியிருக்கிறார்
திருவள்ளுவரைக்
கொண்டாடுகிறவர்கள்
திருக்குறள் பேசிய…
இதனிடையே சனாதன சர்ச்சைக்கு பதிலளித்த உதயநிதி, தான் சொன்ன கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சனாதனம் என்ற கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று தான் நான் பேசினேன். இனியும் அப்படி தான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும், சந்திக்க தயாராக உள்ளேன்.” என்று கூறியிருந்தார்.