MK Stalin: “கொங்கு” மண்டலத்தை கைப்பற்றும் ஸ்டாலின் ; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முதல்வரின் ‘பக்கா’ பிளான்

By manimegalai aFirst Published Nov 23, 2021, 2:16 PM IST
Highlights


முதல்வர் ஸ்டாலின் கோவையை தொடர்ந்து, அடுத்த வாரம்  ‘சேலம்’  வர உள்ளார் என்ற செய்தி ‘கொங்கு’ மண்டலத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

இரண்டு நாள் பயணமாக நேற்று கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ. 587. 91 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 70 பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும், தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள்  சார்பில் கோவை மாவட்டத்தில் ரூ. 89. 73 கோடி மதிப்பிலான 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அந்த பணிகளையும் தொடங்கி வைத்தார்.  

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ஒரு சில காரணங்களுக்காக நான் கோவைக்கு தாமதமாக வர முடிந்தது என்றும் நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா தான் வந்திருக்கேன். செந்தில் பாலாஜி என்னிடம் அரசு விழா ஒன்று நடத்த இருக்கிறோம் என்று அனுமதி கேட்டார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.இங்கு பார்த்தால் தான் தெரிகிறது,இது நிகழ்ச்சி அல்ல, மாநாடு என்று கூறினார்.

உடனே திருப்பூரில் நடைபெற்ற விழாவுக்கும் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கும் கோவையை போலவே உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்று அழைக்கப்படும் சேலத்தில், நடக்கும் விழாவில் முதல்வர் கலந்து கொள்வார் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் அதிரடியை உண்டாக்கி இருக்கிறது. 

இதுகுறித்து நெருங்கிய திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, ‘விரைவில் வரவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் நினைக்கிறார். அதுவும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற  வெற்றியை விட அதிகமாக பெற வேண்டும் என்பதே. ஆட்சி பொறுப்பெற்றதில் இருந்து ஆட்சி சுமூகமாகவே  செல்கிறது. பெரிதாக குற்றச்சாட்டுகள் எதுவும் மக்கள் மத்தியில் இல்லை.வட மற்றும் தென் தமிழகத்தில் இருப்பது போல வலிமையை ‘கொங்கு’ மண்டலத்திலும் நிரூபிக்க வேண்டும் என்று திமுக தலைமை நினைக்கிறது.எனவே தான் கோவை மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும், சேலம் மாவட்டத்திற்கு கே.என்.நேருவையும் பொறுப்பாளராக நியமித்து இருக்கிறார் முதல்வர்.

1 மாதத்திற்கு முன்பாகவே செந்தில் பாலாஜியும்,கே.என்.நேருவும் களத்தில் இறங்கி விட்டனர். மக்கள் குறைதீர் முகாம், தொகுதி முழுக்க சுற்றுதல் என மாவட்டம் முழுமையும் சுற்றி வந்துவிட்டனர். குறிப்பாக கொங்கு மண்டலம்,  திமுகவின் கோட்டையாக எப்படி மாற்றுவது என்று முடிவு செய்து அறிக்கை அனுப்பி உள்ளனர். இதனை பார்த்த முதல்வருக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.எனவே தான் நகர்ப்புற தேர்தலுக்கு சீக்கிரம் தயாராகுமாறு தொண்டர்களை வலியுறுத்தி இருக்கிறார். நேற்று கோவை வந்த முதல்வருக்கு  அளிக்கப்பட்ட வரவேற்பும், மக்கள் மத்தியில் இருந்த ஆதரவும் முதல்வரை கூடுதல் மகிழ்ச்சிக்கு தள்ளி இருக்கிறது.

குறிப்பாக விழா முடிந்தவுடன் செந்தில் பாலாஜியை தனியாக சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘கோவை இனி திமுகவின் கோட்டையாக மாறுவதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். முக்கியமாக இந்த அளவுக்கு பிரம்மாண்ட வரவேற்பினை முதல்வர் ஸ்டாலினே எதிர்பார்க்கவில்லையாம். அதுமட்டும் இல்லாமல், நேற்று திருப்பூரில் கலந்து கொண்ட அரசு விழாவும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. 

அதுவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இரண்டே நாட்களில் இந்த விழா தொடர்பான ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வழியாக நேற்று இரவு மிகுந்த மகிழ்ச்சியுடன் கோவை சென்றார் முதல்வர். அடுத்த வாரம், அதாவது வருகிற 29ம் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 

அந்த நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகள் மந்த நிலையிலே இருந்தது. கொங்கு மண்டலம் கொடுத்த சந்தோஷத்தில் ஹாப்பியான முதல்வர் ஸ்டாலின், உடனே அதையும் நடத்துங்கள் என்று கூற, அதிவேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது விழா ஏற்பாடுகள்.இந்நிகழ்ச்சி சிறப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று சேலம் வடக்கு ராஜேந்திரன் எம். எல். ஏ மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

தேர்தலுக்கு முன்பு ‘கொங்கு’ மண்டலத்தை சுற்றி வளைக்க வேண்டும் என்று திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஊரக உள்ளாட்சி தேர்தலின் தோல்வியில் இருந்து அதிமுக மீளுமா ? அல்லது திமுகவின் வெற்றிக் கணக்கு தொடருமா ? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 

click me!