
டெல்லியில் போராடும் விவசாயிகளை திரும்பிக்கூட பார்க்காமல், பெரா குற்றவாளி தினகரனுக்கு தீவிரமாக வாக்கு சேகரிக்கிறார் முதல்வர் எடப்பாடி என்று ஸ்டாலின் கடுமையாக விளாசியுள்ளார்.
இதுகுறித்து, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து, உரிய வாக்குறுதி அளித்து, திரும்ப அழைத்து வரவேண்டிய முதலமைச்சர், ஆர்.கே.நகரில் “பெரா” குற்றவாளிக்கு வாக்கு சேகரித்து வருவது வெட்கக்கேடானது.
விவசாயிகள் போராட்டத்தில் அக்கறை காட்டாத தமிழக அரசு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வீடு, வீடாக பணம் கொடுக்க வியூகம் வகுப்பதில் மும்முரமாக இருக்கிறது.
கடந்த 14 ஆம் தேதியிலிருந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை தமிழக அரசும், மத்திய அரசும் மதிக்காதது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 13ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
அறவழி போராட்டம் “சங்கு ஊதி போராட்டம்”, “சடலம் போல் படுத்துப் போராட்டம்”, “ஒப்பாரி வைக்கும் போராட்டம்” எல்லாம் நடத்திப் பார்த்து விவசாயிகள் வெறுத்துப் போய்விட்டனர்.
இறுதியில் “மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளும்” போராட்டத்தில் இறங்கி தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ள விவசாயிகள் முயன்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போராட்டங்களில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை திமுக எம்.பி-க்கள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.
நானும் விவசாயிகள் பாோராட்டத்துக்கு மதிப்பளித்து உடனடியாக விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டேன்.
சட்டமன்றத்திலும், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைச் சுட்டிக்காட்டி உடனடியாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
ஆனால், விவசாயிகளின் போராட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு வீடு, வீடாக வாக்காளர்களுக்கு எப்படி பணம் கொடுப்பது என்பது பற்றிய வியூகம் வகுப்பதில் மும்முரமாக இருக்கிறது.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் எல்லாம் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக நடிகர்களும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
ஆனால், இதுவரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போராடும் விவசாயிகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
டெல்லியில் போராடும் விவசாயிகளை ஓடோடிச் சென்று சந்தித்து, உரிய வாக்குறுதிகளை அளித்து, விவசாயிகளை திரும்பவும் பத்திரமாக அழைத்து வந்திருக்க வேண்டியவர் முதலமைச்சர்.
அனால் அவர் “பெரா” குற்றவாளிக்கு ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு கேட்பதில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது வெட்கக்கோடாக இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.